×

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

* இரு சீடர்களுக்கு தலா 20 ஆண்டு ஜெயில்
* ஜோத்பூர் தனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜோத்பூர்: சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும், அவருடைய சீடர்கள் 2 பேருக்கு தலா 20  ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து ஜோத்பூர் தனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.ராஜஸ்தானில் ஆசிரமம் தொடங்கி, இப்போது நாடு முழுவதும் 400 இடங்களில் ஆசிரமம் வைத்திருப்பவர் சாமியார் ஆசாராம் பாபு (77). இவருக்கு  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான சீடர்கள், பக்தர்கள் உள்ளனர்.  உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது 16 வயது  மகளை மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் உள்ள ஆசாராம் ஆசிரம பள்ளியில் சேர்த்தார். இவரை ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே  உள்ள மனாய் பகுதி ஆசிரமத்துக்கு வரும்படி சாமியார் ஆசாராம் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அழைப்பு விடுத்தார். ஆகஸ்ட் 15ம் தேதி இரவு  அந்த சிறுமியை ஆசாராம் பலாத்காரம் செய்தார். இச்சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆசிரமத்தில் நடந்த பலாத்காரம் குறித்து  போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, சாமியார் ஆசாராம் உட்பட 5 பேர் மீது சிறுவர்கள் பாலியல் குற்ற பாதுகாப்பு சட்டம் (போக்சோ), சிறார் நீதிச் சட்டம், இந்திய தண்டனை  சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. 2013, செப்டம்பர் 1ம் தேதி ஆசாராம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2013ம் ஆண்டு நவம்பர் 6ம்  தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் 6 முறையும், ராஜஸ்தான்  உயர் நீதிமன்றத்தில் 3 முறையும், உச்ச நீதிமன்றத்தில் 3 முறையும் ஆசாராம் மனு செய்தார். இந்த 12 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் ஜோத்பூரில் உள்ள எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி முடிந்து, தீர்ப்பு நேற்று  அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் மத்திய சிறைக்கு சென்று  தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஆசாராம், அவருக்கு உடந்தையாக இருந்த சில்பி, சரத் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இந்த  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ், சிவா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் விவாதம் உடனடியாக தொடங்கியது. முதுமையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை  அளிக்க வேண்டும் என ஆசாராம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பின் தீர்பளித்த நீதிபதி, ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்து  அதிரடியாக தீர்ப்பளித்தார். சில்பி, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமிகள் பலாத்கார குற்றத்துக்கு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கான அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2002ல் நடந்த பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீமுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆண்டு  சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தீர்ப்புக்குப்பின் அரசுவக்கீல் போகர் ராம் பிஸ்னாய் அளித்த பேட்டியில்,  ‘‘ஆசாராம் பாபுவுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைப்படி அவர் சாகும் வரை சிறையில்  இருக்க வேண்டும். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். மற்றொரு வழக்கு: குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், தங்களை ஆசாராம் பாபு பலாத்காரம் செய்ததாகவும்,  அதன் பிறகு அவரது மகன் நாராயண் சாய் தங்களை சிறை வைத்ததாகவும் கடந்த 2013ம் ஆண்டு புகார் அளித்தனர். குஜராத்தில் உள்ள மோதிரா  ஆசிரமத்தில் மூத்த சகோதரியை கடந்த 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகவும், இளைய  சகோதரியை சூரத் நகரில் உள்ள ஆசிரமத்தில் நாராயண் சாய் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை பலாத்காரம் செய்து வந்ததாகவும்,  இதற்கு ஆசாராமின் மனைவி மற்றும் மகள் உதவியதாகவும் இரண்டு சகோதரிகளும் குற்றம் சுமத்தினர். இதையடுத்து நாராயண் சாய் கடந்த 2013ம்  ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் ஆசாராமின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இந்த மாத துவக்கத்தில் உத்தரவு பிறப்பித்தது.  இது தொடர்பான வழக்கை 5 வாரத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிலுவையில் உள்ள இந்த வழக்கிலும்  ஆசாராமுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரமங்களுக்கு பாதுகாப்பு
ஆசாராம் பாபு மீதான பலாத்கார வழக்கில் நேற்று அளிக்கப்பட இருந்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆசாராம் பாபுவின் ஆசிரமங்களுக்கு அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள  மோதிரா, சமர்மதி,  சந்த்கேடா, சூரத் அருகே உள்ள ஜகாங்கிர்புரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆசிரமங்களுக்கு வெளியே போலீசார்  குவிக்கப்பட்டனர். அதிக ஆதரவாளர்களை கொண்ட ராஜஸ்தான், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல்  படைகளை குவிக்கப்பட்டன.

நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், “நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீதித்துறை, ஊடகங்களுக்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தீர்ப்பு  வந்துள்ளது திருப்தியளிக்கிறது. வழக்கு விசாரணை நடந்து வந்தபோது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக ஆசிரமத்தை சேர்ந்தவர்கள்  எங்களுக்கு ஆசை வார்த்தை கூறினார்கள். இதற்கு உடன்படாததால் மிரட்டப்பட்டோம். நீதியின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தோம்”  என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு ஆசாராம் ஆசிரமத்தில் தங்கியிருந்த திபேஷ், அபிஷேக் வேகலா என்ற சீடர்கள் மர்மமான முறையில் ஆற்றங்கரையில் இறந்து  கிடந்தனர். இந்த மரணம் தொடர்பாக 2009ம் ஆண்டு ஆசாராம் ஆதரவாளர்கள் 7 பேர் மீது மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.  ஆசிரமத்தில் மாந்திரீகம் செய்ததால்தான் தனது பிள்ளைகள் இறந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.   பின்னர் 2013ம் ஆண்டு ராஜஸ்தானில்  சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். பிறகு சூரத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள், ஆசாராம் மீதும் அவரது மகன்  நாராயண் சாய் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். 2013ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி இரண்டு சகோதரிகளின் புகாரின் பேரின்  ஆசாராம் பாபு, நாராயண் சாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அகமதபாத், சூரத்தில் ஆசிரமத்துக்காக நிலத்தை அபகரித்ததாக ஆசாராம் மீது  குற்றம்சாட்டப்பட்டது.

40 வருஷ உழைப்பாம் 4வது படித்த சாமியாருக்கு 10 ஆயிரம் கோடி சொத்து
ராஜஸ்தானில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் கடந்த 1970களில் ஒரு சிறிய குடிசையில் தனது ஆசிரமத்தை தொடங்கியவர் ஆசாராம் பாபு. தற்போது  நாடு முழுவதும் இவருக்கு சொந்தமாக 400 ஆசிரமங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2013ம் ஆண்டில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இவர்  கைது செய்யப்பட்டபோது, இவருக்கு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தன.பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, இவர் மீது நில மோசடி, மாந்திரீகம் செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இவ்வளவு  குற்றச்சாட்டுக்களுக்கு பிறகும் ஆசாராமுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.ஆசாராமின் அலுவலக வெப்சைட்டில் அவரது வாழ்க்கை வரலாற்றை குறிக்கும்  குறும்படம் இடம் பெற்றுள்ளது.

ஆசாராம் பாபு கடந்த 1941ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பெரானி கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அசுமால்  சிறுமாலானி. 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பெற்றோருடன் அகமதாபாத்தில் குடியேறினார். மணிநகரில் 4ம் வகுப்பு வரை  மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அவருக்கு 10 வயதாக இருக்கும்போது அவரது தந்தை தாவ்மால் உயிரிழந்தார். தந்தை இறந்த பிறகு அவர்  பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். சிறு வயதிலேயே பல்வேறு கடினமாக பணிகளை அவர் செய்யவேண்டி இருந்தது.வாலிப வயதை அடைந்த அவர் இமயமலைக்கு சுற்றுலா சென்றார். அங்கு லிலாஷா பாபு என்பவரை சந்தித்தார்.

அவரை தனது குருவாக  ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆசாராம் என பெயரை இந்த குருதான் வைத்தார். 1964ம் ஆண்டு அவரது சொந்த பாதையில் செல்லும்படியும், மக்களுக்கு  வழிகாட்டும்படியும் குரு லிலாஷா பாசுவால் உத்தரவிடப்பட்டார். தொடர்ந்து 70ம் ஆண்டுகளில் அகமதாபாத் வந்த ஆசாராம், மோதிரா பகுதியில்  சபர்மதி ஆற்றின் அருகே சொற்பொழிவு ஆற்றினார். 1972ம் ஆண்டு ஆன்மிக தலைவராக தனது பயணத்தை தொடங்கினார். சபர்மதி ஆற்றங்கரை  அருகே “மோட்ச குதிர்” என்ற சிறிய குடிசையில் ஆசிரமத்தை தொடங்கினார். ஒரே  ஆண்டில் மக்களிடையே பிரபலமனார். மக்களும்,  ஆதரவாளர்களும் அவரை ஆசாராம்ஜி பாபு என அழைக்க ஆரம்பித்தனர். சிறிய குடிசை மிகப்பெரிய கட்டிடமான உயர்ந்து முழு ஆசிரமமாக மாறியது.  40 ஆண்டுகளில் 400 ஆசிரமங்களை அவர் ெதாடங்கி நடத்தி வருகிறார். இன்றளவும் மோதிரா பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு பக்தர்கள்  படையெடுத்தபடி  உள்ளனர்.ஆசாராம்பாபுவுக்கு லக்‌ஷி தேவி என்ற மனைவியும், நாராயண சாய் என்ற மகனும், பாரதி தேவி என்ற மக்ளும் உள்ளனர்.

Tags :
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...