ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: ‘ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசின் கட்டண நிர்ணய குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட அதிக தொகையை திரும்ப வழங்க வேண்டும் என உத்தவிடக் கோரி, மருத்துவ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யுயு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், 'மாணவர்கள் படிப்பிற்காக ஆண்டுக்கு ரூ.5 முதல் 6 லட்சம் வரை கல்லூரி நிர்வாகத்திடம் கட்டணம் தரப்படுகிறது.  

ஆனால், இந்த தொகைகள் அனைத்தும் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு சொந்தமான மருத்துவ கல்லூரியின் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது’’ என குற்றம்சாட்டினார். இதற்கு, பல்கலைக் கழக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம்தான் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறதா என்பதையும், மாணவர்களிடம் வசூலிக்கும் தொகை மற்றும் கல்வி கட்டண விவரங்கள் குறித்து தமிழக அரசின் பல்கலைக் கழக கட்டண நிர்ணய குழு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

× RELATED 2019ம் ஆண்டு தொடங்கி 2 வாரத்தில் நாட்டில்...