×

டிஎன்பிஎஸ்சி தேர்வானவர்களின் மூலச்சான்றுகள் இசேவை மையங்களில் பதிவேற்றம் : மே 4ம் தேதி கடைசி நாள்

கிருஷ்ணகிரி: டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களுடைய  மூலச்சான்றுகளை இசேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய மே 4ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஸ்சி) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், இணையவழி மூலம் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில், இப்பணியை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது பல்வேறு செயல்பாடுகளில் துரித மற்றும் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில், அவ்வப்போது புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்விற்கென தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்திற்கு இருமுறை சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் தேர்வர்களுக்கு ஏற்படும் பண விரயம் மற்றும் காலவிரயத்தினை தவிர்க்க, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், ஆன்லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்து தகுதிக்குரிய ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ்களை, ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த நடைமுறை, ஒருகிணைந்த குடிமை பணிகள் தேர்வு 2ல்(தொகுதி 2ஏ) (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலிருந்து தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் மே 4ம் தேதிக்கு முன்பாக மூல சான்றிதழ்களை தேர்வாணைய இணைய தளத்தில், தாலுகா தலைநகரங்களில் செயல்படும் அரசு இசேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு சான்றிதழ் ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்ய 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...