×

நெல்லை - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் 27ம் தேதி முதல் இயக்கம் : ரயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லை தாம்பரம் அந்தியோதயா ரயில்கள் வரும் 27ம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் தினசரி ரயில்களாக இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் சென்னையில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு இரு அந்தியோதயா ரயில்கள் அறிவிக்கப்பட்டன.  முழுவதும் முன்பதிவற்ற பெட்டிகளை கொண்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ்கள் கடந்தாண்டு இறுதியிலேயே இயக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்தியோதயா பெட்டிகள் இல்லாததால் ரயில்களின் இயக்கம் தள்ளிப்போடப்பட்டது.

இந்நிலையில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு கடந்த மார்ச் மாதம் சோதனை அடிப்படையில் 4 முறை அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட்டன. ரூ.200 கட்டணத்தில் சென்னை செல்ல வாய்ப்பு கிட்டியதால் அந்த ரயிலுக்கு நல்ல வருவாயும் கிட்டியது. இருப்பினும் மாற்றுபெட்டி இல்லை என்பதை காரணம் காட்டி அந்த அந்தியோதயா ரயிலை தெற்கு ரயில்வே உடனடியாக நிறுத்திவிட்டது. இந்நிலையில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 27ம் தேதி முதல் இருமார்க்கத்திலும் தினசரி அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை  தாம்பரம் அந்தியோதயா தினசரி எக்ஸ்பிரஸ் (எண்.16192) தினமும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் போய் சேரும். மறுமார்க்கமாக தாம்பரம்  நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(எண்.16191) தாம்பரத்தில் இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு அதே நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும். புதிய அந்தியோதயா ரயிலில் 16 பொதுபெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.

Tags :
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...