×

கடையம் அருகே சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை

கடையம்: கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது. தெருக்களில் கிடந்த குப்பைகள் சூறாவளி காற்றில் சுழன்றடித்தன. கடையத்தில் இருந்து நெல்லை செல்லும் வழியில் வெள்ளிகுளத்தில் நவாப்பழ மரத்தின் பெரிய மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் கடையத்தில் இருந்து நெல்லை சென்ற வாகனங்கள் ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம் வழியாக நெல்லை சென்றன. நெல்லையில் இருந்து வந்த வாகனங்கள் ஏபி நாடானூர் வழியாக கடையம் வந்தன. சாலை பணியாளர் கருப்பசாமி, மற்றும் வெள்ளிகுளம் இளைஞர்கள் மரக்கிளையை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கடையம் லட்சுமியூரில் மாலை 6.30 மணிக்கு சூறைக்காற்றுடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்து பூமியை குளிர்வித்தது. விட்டு விட்டு பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் சாலைகளில் ஆங்காங்கே பனிக்கட்டி காணப்பட்டது. மின்னல் தாக்கி விவசாயி பலி: குத்தப்பாஞ்சான் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மிக்கேல் (58)நேற்று மாலை தோட்டத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் மிக்கேல் உடல் கருகி இறந்தார். அதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாசிலாமணி என்பவருக்குச் சொந்தமான ஒரு பசுமாடும் மின்னல் தாக்கி உயிரிழந்தது.

Tags :
× RELATED சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை...