×

வனச்சாலையோரம் நடமாடும் யானைகளை படம் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை : வனஆர்வலர்கள் கோரிக்கை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை செல்போனில் படம் பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்லும் திண்டுக்கல்  பெங்களுரு சாலையில் புதுவடவள்ளி முதல் காரப்பள்ளம் வரை சாலையின் இருபகுதியிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனச்சாலையோரம் தீவனம் தேடி அலைவதோடு அவ்வப்போது சாலையை கடக்கின்றன. வனவிலங்குகள் நடமாடும் பகுதி என வனத்துறையினர் எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர்.

இருப்பினும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஆபத்தை அறியாமல் வனவிலங்குகளை செல்போனில் புகைப்படம் எடுக்கின்றனர். நேற்று ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒற்றையானை மூங்கில் கிளைகளை தும்பிக்கையால் முறித்து தீவனம் சாப்பிட்டுகொண்டிருந்ததை ஒருவர் அருகே சென்று செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட வன ஆர்வலர்கள் அந்நபரை எச்சரித்தனர். வனத்துறையினர் வனச்சாலைகளில் தொடர்ச்சியாக ரோந்து சென்று வனவிலங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED யானை தாக்கி விவசாயி பலி