×

பாகிஸ்தானுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு அடிப்படை உரிமைகளின் எதிரி தீவிரவாதம் : சீனாவில் அமைச்சர் சுஷ்மா பேச்சு

பீஜிங்:  “அடிப்படை மனித உரிமைகளின் எதிரி தீவிரவாதம்” என சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பேசிய அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசீப் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இந்த கூட்டம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். மறைமுகமாக பாகிஸ்தானை தாக்கும் வகையில் அவர்,  சர்வதேச தீவிரவாதம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் கொள்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உலகத்தால் இன்று பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றில் சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தல் என்பது முதலிடத்தில் உள்ளது. இதற்கு எதிராக வலிமையான கட்டமைப்பை உடனடியாக உருவாக்குவது அவசியமாகும். தீவிரவாதம் என்பது அடிப்படை மனித உரிமைகளான வாழ்க்கை, அமைதி, செழிப்பு ஆகியவற்றுக்கும் எதிரியாக உள்ளது.

சர்வதேச ஸ்திரதன்மை என்ற கட்டிடத்தை சேதப்படுத்தி, பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் அச்சம் என்ற சுவரை எழுப்ப வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கமாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது தீவிரவாதத்தை அகற்றுவதற்காக மட்டும் அல்ல, தீவிரவாதத்தை ஊக்குவித்தல், ஆதரவு அளித்தல், நிதியுதவி, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நாடுகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே என நம்புகிறேன். சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் கொள்கைகள் அனைத்து வகைகளிலும் நிராகரிக்கப்பட வேண்டும். வர்த்தகத்திற்கு தடையாக உள்ளவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதாரம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்துவதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகின்றது. பரஸ்பர நன்மைகள் உள்ளிட்ட நலன்களுக்காக பொருளாதார உலகமயமாக்கல் என்பது அதிக வெளிப்படைத்தன்மை, சமத்துவம் மற்றும் சமநிலையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து