×

கமல்ஹாசன் கட்சிக்கு நெட்வொர்க் இல்லை : டெல்லியில் திருநாவுக்கரசர் பேட்டி

புதுடெல்லி: நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கினாலும் அந்த கட்சிக்கு இதுவரை நெட்வொர்க் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் இதுகுறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,” அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் பாராட்டுவிழா அல்லது அவரை அழைத்து, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று அவர் கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கேட்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்வார் என நாங்கள் நம்புகிறோம். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பார்கள். மேலும் ராகுல்காந்தி மோடிக்கு விடும் அரசியல் சவால் என்பது முற்றிலும் உண்மையான ஒன்றுதான். பிரதமர் மோடி என்றைக்காவது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறாரா?

பாராளுமன்றத்தில் உட்கார்ந்து ஏதாவது பிரச்னை பற்றி பேசி இருக்கிறாரா? தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் நீர்த்து போனதையோ, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையோ அவர் கண்டித்து பேசியுள்ளாரா எனவே இதுகுறித்த சவாலை மோடி ஏற்றுக்கொண்டு தான் தீர வேண்டும்.
இதைத்தவிர ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்து விட்டது. மாநிலத்தில் யாருக்கு எத்தனை சதவீதம் ஓட்டு உள்ளது என்று தேர்தல் முடிந்தபிறகுதான் தெரியவரும். இதில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் முழுமையான நெட்வொர்க் இல்லை. ரஜினிகாந்த் நெட்வொர்க் ஏற்படுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கட்சி தொடங்கவில்லை. டிடிவி.தினகரன் சுற்றுப்பயணம் செய்கிறார். ஆனால் சின்னமும், கட்சியும் அடுத்த கோஷ்டியிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் எங்களுக்கு பிரதான எதிரி என்று எவரும் கிடையாது என்றார்.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…