×

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டி : கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

சென்னை: “எறும்பு கதை கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும்” என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் “கிராமிய தேசியம் என்றால் நாளை நமதே” என்ற ெபயரில் மாதிரி கிராம சபை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கமல் பேசியதாவது: கிராம சபை கிராமங்களின் பலம். இந்த சட்டம் இயற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இந்த சட்டம் சரிவர இயங்கவில்லை.  ஊழல் ஒழிப்பு என்பது உடனடியாக முடியாது. முதலில் குறைப்பு, அடுத்து தடுப்பு, அடுத்து ஒழிப்பு என்று தான் ஊழலை ஒழிக்க முடியும். நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். கிராமத்து உடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு. கிராம சபை என்பது ஊற்று போன்றது. அதை நமது அஜாக்கிரதையால் சாக்கடையை கலக்க விட்டு விட்டோம். அந்த சாக்கடை போக்க வேண்டும். ஊற்று மீண்டும் வர வேண்டும். அதை நாங்கள் இன்று ஆரம்பித்து இருக்கிறோம்.

காவிரி தண்ணீருக்காக நாம் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்துகளில் குரல் வலுத்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை பாராளுமன்றத்துக்கு உள்ளது. மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு நாம் காவிரி நீரை கொண்டுவர முடியும். சட்டசபை போன்ற இடங்கள் தொடங்கப்பட்டதற்கு முன்னரே இந்த கிராம சபைகள்  தொடங்கப்பட்டது. கிராம சபைகளில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டால் அதை  சட்டசபையிலும், பாராளுமன்றங்களிலும் நிறைவேற்ற முடியும். நீதிமன்றங்களும்  நமக்கு ஆதரவளிக்கும். காவிரி பிரச்சனை போன்று இன்று நாம் சந்தித்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வுகளை கிராம சபைகளில் எடுக்க முடியும். கிராம சபைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மக்கள் நீதி மய்யத்திடம் சொல்லுங்கள், மக்கள் பணியாளர்களாக நாங்கள் அரசு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை செய்வோம். அனைவரும் வருகிற மே 1ம் தேதி உங்கள் கிராமங்களில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நானும் அன்றைய தினம் கிராமங்களுக்கு செல்ல உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கமல் அளித்த பேட்டியில், “ கிராமத்தின்  அனுமதி இல்லாமல் கிராமத்தை யாரும் தத்து எடுக்க முடியாது. தத்து எடுக்கும் முயற்சியில் பலர் தோல்வி  அடைந்து உள்ளார்கள். எனவே யாரும் முந்திரிக்கொட்டை வேலை பார்க்க  வேண்டாம். நாங்கள் 8 கிராமங்களை தத்தெடுக்கப்பட்டப்பாடு எங்களுக்கு மட்டும்  தான் தெரியும். எனவே மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் ஆள் ஆளுக்கு  கிராமத்தை தத்து எடுப்பதற்காக புறப்பட்டு போய் விடாதீர்கள். அப்புறம் இது  பக்தி பஜனைக்கு புறப்படும் கூட்டம் போன்று ஆகிவிடும்.
கிராம பஞ்சாயத்துக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலில்  கண்டிப்பாக போட்டியிட முயற்சி செய்யும். எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் போட்டியிடுவோம்  என்றார்.

சும்மா வாயாடாதீங்க ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் “கமல் சிற்றெரும்பு, இந்த சிற்றெரும்பு அரசியலில் இருந்து காணாமல் போய் விடும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, என்னை எறும்பு என்று சில பேர்  சொல்லிட்டு இருக்கீறார்கள். யானை காதில் எறும்பு போனால், என்ன ஆகும். நான்  எறும்பு என்று ஒத்து கொள்கிறேன். அதற்காக நீங்கள் யானை என்று நினைத்துக்  கொள்ளாதீர்கள். உங்களுக்கு நாங்கள் ஒரு பெயர் வைத்துள்ளோம். உங்கள் காதில் போகணுமா? போக கூடாதா? என்பதை எறும்பின்  சுத்தம் கருதி செய்வோமா, மாட்டோமா? என்பதை நாங்கள் முடிவு செய்து  கொள்வோம். எனவே இந்த விளையாட்டை எல்லாம் இங்கே விளையாடதீர்கள். அந்த  வார்த்தை ஜாலம் எல்லாம் முடிந்துவிட்டது. இது செயல்படும் நேரம்” என்று பதிலடி கொடுத்தார். 

Tags :
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...