ராஜிவ் - டெங் ஜியோபிங் சந்திப்பு போல் மோடி-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறும்: குளோபல் டைம்ஸ் கருத்து

பீஜிங்: கடந்த 1988ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, சீனத் தலைவர் டெங் ஜியோபிங் இடையே நடந்த சந்திப்புபோல், மோடி - ஜின்பிங் ஆகியோரது சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என சீன அரசின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாளை மறுநாள் சீனா செல்கிறார். 2 நாள் சீன பயணத்தில் உகான் நகரில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு மற்றும் உலக நடப்புகள் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காங் ஜூவான்யு கூறியதாவது:

மோடி-ஜின்பிங் இடையோன சந்திப்பில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.நம்பிக்கை குறைவு காரணமாகத்தான் டோக்லாம் எல்லை பிரச்னை உருவானது. அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோருக்கு தொலைநோக்கும், பொறுப்பும் உள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. தங்கள் நாடுகளின் உறவு மேம்பட இரு நாட்டு தலைவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், ‘‘கடந்த 1988ம் ஆண்டு சீன தலைவர் டெங் ஜியோபிங்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் சந்தித்து பேசினர். அப்போது சண்டை, சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இப்போது மோடி-ஜின்பிங் இடையே நடைபெறும் சந்திப்பு இருக்கும். வர்த்தகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை விஷயங்களில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களை எதிர்க்கொள்ள இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளின் தூண்டுதல் மற்றும் நம்பிக்கை குறைவு காரணமாகத்தான் எல்லை பிரச்னை உட்பட பல முரண்பாடுகள் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டன. டோக்லாம் எல்லை பிரச்னைக்குப்பின் இந்தியா-சீனா பதற்றம் தணிந்தது’’ என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்ற கருத்தை சீன அரசின் மற்றொரு பத்திரிக்கையான சீன டெய்லியும் தெரிவித்துள்ளது.

× RELATED இலங்கை கடற்படையால் கைதான புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு