×

கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டி

சென்னை: கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைகிறது. முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.  கர்நாடக சட்டப் பேரவைக்கான 224 தொகுதிகளுக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாட்டையே மிகவும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ள கர்நாடகா தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.  கடந்த 2013 தேர்தலில் காங்கிரஸ் 122 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் மற்ற கட்சி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து, கர்நாடகாவில் ஆட்சியை இந்த முறை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சித்தராமையா ஏற்கனவே தான் வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளார். பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2008ல் உருவாக்கப்பட்ட சட்டமன்ற தொகுதியான வருணா தொகுதியில்தான் சித்தராமையா போட்டியிட்டு முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது அதே தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிட இருக்கிறார்.

சித்தராமையா இந்தமுறை தன்னுடைய பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளார்.
 இந்த நிலையில் இதே தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட உள்ளார் என்று பேசப்பட்டது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், பாஜக இந்த முடிவில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடுவது உறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது.  மருத்துவம் படித்துவிட்டு அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்த இவர், தன்னுடைய சகோதரரின் மரணத்திற்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கட்சிக்குள் வந்தார்.

இவர் பிறந்ததில் இருந்து வருணா தொகுதியில்தான் வசித்து வருகிறார். ஆனால் இந்த தொகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பெங்களூர்வாசியான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பாஜக கட்சியால் நிற்க வைக்கப்படுவது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் எடியூரப்பாவின் மகன் போட்டியிட்டால் கர்நாடகாவில் இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படும்.  இந்நிலையில், காவிரி நீர் விஷயத்தில் கர்நாடக மாநிலத்தின் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக முதல்வர் சித்தராமையா கையாண்டுள்ளதால் அவருக்கு மக்களிடம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளாக கூறப்படுகிறது.

தற்போது கர்நாடக மாநிலத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் நேற்று வரை 1,127 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் ெசய்ய இறுதி கெடு என்பதால் இன்று காலை முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

Tags :
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்