×

தொடங்கியது கோடைகாலம் நாகர்கோவிலில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி பகுதிமக்களுக்கு குடிநீர் முக்கடல் அணையில் இருந்து கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணை மொத்தம் 163 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் அணையின் முன்  பகுதியில் 7.5 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இதனை போக மீதமுள்ள  பகுதி அணை நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. முக்கடல் அணையில் இருந்து பெரிய குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்தம் செய்து நாகர்கோவில் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 நாகர்கோவில் நகராட்சியில் சுமார் 48 ஆயிரம் வீடுகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தவிர தெருபகுதியிலும் தெருபைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை தவிர்த்து நாகர்கோவில் நகராட்சி முழுவதும் 863 ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகராட்சியில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேவைகள் அதிகரித்துள்ளது. மேலும் கோடைகாலத்தை சம்மாளிக்க நகராட்சி முடிவு செய்து 10 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.  
 கடந்த வருடம் போதிய மழை இல்லாதகாரணத்தால் கோடைகாலத்தில் முக்கடல் அணை தண்ணீர் இன்றி வறண்டது.

இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக 50 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டது. இதனால் கடந்த வருடம் எந்த வித பிரச்சனையும் இன்றி குடிநீர் தட்டுப்பாடு  தவிர்க்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் பேச்சிப்பாறை அணை பலப்படுத்தும் பணி நடப்பதால், அணையில் தண்ணீர் தேக்கிவைக்கப்படவில்ைல. இதனால் நாகர்கோவில் நகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கிடைப்பது கஷ்டம்தான். தற்போது முக்கடல் அணையில் 13 அடி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் கோடைகாலம் முடியும் வரை தாக்குபிடிக்குமா என்பது தெரியவில்லை.

 இது குறித்து நாகர்கோவில் நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது: கடந்த வருடம் முக்கடல் அணையில் போதிய தண்ணீர் இல்லாதபோது, கலெக்டரின் உத்தரவின்பேரில் பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்தவிடப்பட்டது. அதனால் கடந்த வருடம் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்போது முக்கடல் அணையில் 13 அடி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் கோடைகாலம் முடியும் வரை தாக்குப்பிடிக்கும். அணையில் இருந்து 180 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் பம்பிங் செய்யப்பட்டு, அதனை சுத்திரிப்பு செய்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைகாலம் முழுமையாக மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் பருவமழை பெய்ய தொடங்கும், அதன்பிறகு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவாய்ப்பில்லை.

ஒருவேளை பருவமழை இல்லாமல் போனால் கடந்த வருடம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் பெற்றதுபோல் இந்த வருடமும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் நாகர்கோவில் நகர மக்களுக்கு இந்த வருடமும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கோடைகாலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நாகர்கோவில் நகராட்சி முடிவு செய்து இருந்தாலும், வருணபகவான் கருணை காட்டி மழை பெய்தால் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டும் உயரும் பட்சத்தில் நாகர்கோவில் நகராட்சி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

Tags :
× RELATED மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து...