×

மலை, குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய வறட்சியான வடகாட்டில் மிளகு உற்பத்தி: அதிக மகசூலால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு, மாங்காடு, கீரமங்கலம் நெடுவாசல், அணவயல், கொத்தமங்கலம், பள்ளத்திவிடுதி, புள்ளான்விடுதி, மேலாத்தூர், அரையப்பட்டி, வன்னியன்விடுதி, குப்பகுடி, கோவிலூர், பாச்சிக்கோட்டை, கே.ராசியமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளிலும், அதேபோல், கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை, நம்பன்பட்டி, விஜயரெகுநாதப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மழையில்லாததால் இப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவிவருகிறது. ஆறு, குளங்கள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீர்மட்டம் குறைந்ததால் கிணறுகளும் தண்ணீரின்றி வற்றியது. இதனால் சுமார் 350 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள், காய்கறிகள் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றதால் 600 அடி முதல் 1000 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளர்.  அதிலும் தண்ணீர் குறைந்தளவே கிடைக்கிறது.  
இருப்பினும் விவசாயிகள் ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கும் சிறிதளவு தண்ணீரை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள், காய்கறிகள் பயிரிட்டு வந்த நிலையில் அதில் போதுமான அளவு வருமானம் கிடைக்காததால், புதிய முயற்சியாக மிளகு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலங்குடி அருகே வடகாடு, வடக்குப்பட்டியில் மலை மற்றும் குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் என்று கூறப்பட்டு வந்த மிளகு விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கேரளாவிற்கு சென்று மிளகு கன்றுகளை வாங்கி வந்து கடந்த 1991-ம் ஆண்டு நடவு செய்தனர்.

மிளகு ரகங்கள் 36 வகை இருந்த போதும் அதில் எந்த ரகம் இப்பகுதியில் விளையும் என்றும், மேலும் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்று சோதனை செய்து, அதில் கரிமுண்டா, காவேரி, வயநாடா ஆகிய ரக மிளகு தான் இப்பகுதியில் நன்றாக விளையும் என தேர்வு செய்து அதனை தென்னை, காப்பி மற்றும் சந்தன மர தோப்பில் ஊடுபயிராக பயிரிட்டுள்ளனர். மேலும், மிளகு கொடிபோல் படரும் தன்மை கொண்டதால், இதனை தென்னை, காப்பி மற்றும் சந்தனமரங்களில் படரவிட்டு அதிலிருந்து அதிக அளவிலான மிளகு மகசூல் பெற்று வருகின்றனர். இதனால், தற்போது ஆண்டுக்கு 1 ஏக்கருக்கு மிக குறைந்த செலவில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மிளகு விற்பனை செய்து வருகின்றனர்.

ஒருமுறை பயிர் செய்யப்படும் மிளகு பயிர் பயிரிட்ட 3வது ஆண்டு முதல் மகசூல் கொடுக்க தொடங்கும். மேலும், இப்பயிர் 5 ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு கொடியில் 2 முதல் 5 கிலோ வரை மிளகு கிடைப்பதாலும், ஒருமுறை நடவு செய்யப்படும் மிளகு பயிர் 30 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் என்பதால், இதனை பயிர் செய்து அதிக அளவில் வருமானம் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, வடகாடு வடக்குப்பட்டியை சேர்ந்த மிளகு விவசாயி பால்சாமி கூறுகையில், மாற்று விவசாயம் செய்தால்தான் அதிக லாபம் பெற முடியும் என்பதால், மிளகு பயிரிட்டுள்ளோம்.  மிளகு செடியின் இலைகள் கூட காட்டமாக இருப்பதால் பூச்சி தாக்காது. எந்த ஒரு விவசாயமும் அதிக லாபம் கொடுக்காத நிலையில், மிளகு நல்ல லாபத்தை கொடுக்கிறது. ஆண்டு முழுவதும் விற்பனை செய்வதில் பிரச்னையே இல்லாத பயிராக மிளகு உள்ளது. இங்கு விளைந்த மிளகு அதிக காரத்தன்மை கொண்டதால், ஏற்றுமதிக்கு ஏற்ற மிளகாக உள்ளது.  1 கிலோ மிளகு 1000 ரூபாய் விற்று வரும் வரும் நிலையில், நாங்கள் 800 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். பலரும் விரும்பி வந்து வாங்கி செல்வதாகவும் கூறினார்.

Tags :
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...