×

திருநீர்மலையில் பரபரப்ப: டாஸ்மாக் கடை அடித்து உடைப்பு: பெண்களை கைது செய்து விசாரணை

பல்லாவரம்: திருநீர்மலையில் புதிதாக திறக்கவிருந்த டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதுசம்பந்தமாக 15க்கு மேற்பட்ட பெண்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலையில் உள்ள புலிமேடு ஒய்யாலி அம்மன் கோயில் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடையின் கண்காணிப்பாளர் சிவகுமார், டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
இதற்காக நேற்று இரவு 11 மணியளவில் ஒரு லாரியில் மதுபானங்கள் கொண்டுவந்து கடையில் அடுக்கிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் சிவகுமார் உள்ளிட்ட பணியாளர்களோ கண்டுகொள்ளாமல் தங்களது வேலையை செய்துகொண்டிருந்தனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடைக்குள் அதிரடியாக புகுந்தனர். கடையில் இருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். இதனால் கண்காணிப்பாளர் உள்பட ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பல லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் சேதம் அடைந்தது.

கடையில் இருந்த மின்விசிறி, மேஜை உள்ளிட்ட பொருட்களையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்தனர். டாஸ்மாக் கடையை சேதப்படுத்தியது தொடர்பாக 16க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், கடந்தாண்டு இதே பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டபோது எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதனால் இங்கு கடையை ஆரம்பிக்கவில்லை. தற்போது குடியிருப்பு அருகே மதுக்கடையை அமைக்கின்றனர். இது போன்று குடியிருப்பு அருகே மதுக்கடையை திறந்து எங்களை அரசு வஞ்சித்து வருகிறது. எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை. நாங்கள் எங்கள் பகுதியில் மதுக்கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம்’ என்றனர்.

Tags :
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்