×

நிர்மலா தேவி விவகாரத்தில் மேலும் 6 மாணவிகள் புகார்: 22 மணி நேர விசாரணைக்கு பிறகு உதவி பேராசிரியர் முருகன் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு பின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

முருகனிடம் ‘கிடுக்கிப்பிடி’
நிர்மலாதேவிக்கு உடந்தையாக செயல்பட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், நேற்று சிபிசிஐடியிடம் சிக்கினார். அவரை விருதுநகர் அழைத்து சென்ற சிபிசிஐடி போலீசார், நேற்று மதியம் முதல் இன்று காலை வரை அவரிடம் விடிய விடிய கிட்டத்தட்ட 22 மணி நேரமாக விசாரணை நடத்தினர். இதில் இந்த முறைகேடு தொடர்பான ஏராளமான புதிய தகவல்களை அவர் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 22 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் கணிதத்துறை தலைவர் நாகராஜன் மற்றும் கல்லூரியின் அலுவலக ஊழியர்கள் 3 பேரிடமும் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விடைத்தாள் திருத்தும் பணிக்காக நாகராஜனுடன்தான், நிர்மலாதேவி காமராஜர் பல்கலைக்கழகம் சென்றார் என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். நிர்மலாதேவிக்கு உடந்தையாக செயல்பட்ட திருச்சுழி அருகே நாடாகுளம் கிராமத்தை சேர்ந்த ஆய்வு மாணவர் கருப்பசாமியை, சிபிசிஐடி தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

நேற்று அவரது நெருங்கிய உறவினர்களான அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் முனீஸ்வரன், தனியார் பள்ளி ஆசிரியர் அண்ணாத்துரை ஆகியோரிடம் திருச்சுழி காவல்நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.

நிர்மலாதேவி இவர் வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள், துறைத் தலைவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்து பேசிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, சிபிசிஐடி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர். நேற்றுடன் 4 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில், நிர்மலாதேவியிடம் இருந்து உருப்படியாக எந்த தகவலையும் பெற முடியவில்லை என்று சிபிசிஐடி போலீசார் புலம்பி வருகின்றனர்.

நிர்மலாதேவி விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் மற்றும் சி.டி.க்களில் இருந்து, இந்த வழக்குக்கு தேவையான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
5 நாள் காவலில் நிர்மலாதேவி பல கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார் என்றும், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்த சிபிசிஐடி போலீசார், அவரை மீண்டும் குறைந்தது 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் 6 மாணவிகள் புகார்
நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரித்து வருகிறார். இவரது முதல் கட்ட விசாரணை கடந்த 21ம் தேதி முடிந்தது. 2ம் கட்டமாக நாளை முதல் விசாரணை நடைெபறும் என இவர் அறிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரிக்கு சென்று, நிர்மலாதேவியுடன் போனில் பேசிய 4 மாணவிகளிடம் இவர் விசாரித்தார். இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘மாணவிகளிடம் விசாரணை நடத்தியது குறித்து கேட்காதீர்கள். அவர்கள் பட்டப்படிப்பை ஒழுங்காக முடிக்க வேண்டும். மேலும் உயர் படிப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என்று கோபத்துடன் பதிலளித்தார்.

இந்நிலையில் அன்றைய விசாரணையின் போது, பேராசிரியை நிர்மலாதேவி தங்களையும் பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக தேவாங்கர் கல்லூரியின் மாணவிகள் மேலும் 6 பேர் தகுந்த ஆதாரங்களுடன், சந்தானத்திடம் புகார் செய்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சிபிசிஐடி போலீசார் கல்லூரிக்கு வரட்டும் என்று இந்த மாணவிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மதுரைக்கு தங்களை ஷாப்பிங் அழைத்து சென்று விலை உயர்ந்த உடைகள், பொருட்களை வாங்கிக் கொடுத்து, பேராசிரியை வலை விரித்தார் என்றும், பாலியல் தொழிலுக்கு அவசரப்படுத்தினார் என்றும், அதற்கு தாங்கள் உடன்படவில்லை என்றும் இந்த 6 மாணவிகளும், சந்தானத்திடம் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் மேலும் மேலும் சூடுபிடிக்கிறது.

ஒப்புக்கு விசாரிக்கும் சிபிசிஐடி?

சிபிசிஐடியின் விசாரணை திசை திருப்பும் விதமாகத்தான் உள்ளது என்று காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடமோ, கல்லூரிக்கு சென்றோ இதுவரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவில்லை. வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் பல்கலை.யில் உயர்மட்ட பதவிகளில் உள்ளவர்களுக்காகவே நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்துள்ளார் என்பது அவரது ஆடியோ பதிவுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமின்றி தெரியவந்துள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரித்து, அதன் அடிப்படையில் வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் பல்கலை. உயரதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிபிசிஐடி குழுவில் எஸ்.பி., 3 டிஎஸ்பிக்கள் உட்பட 56 பேர் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நிர்மலாதேவி, அவரது கணவர், அவரது சகோதரர், கணவருக்கு ஒப்பந்தங்களை எடுக்க உதவிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என ஒப்புக்கு சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது என்றும் பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags :
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...