×

தலைமை நீதிபதி தகுதி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட முடிவு: வெங்கையா நாயுடு

புதுடெல்லி:  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக செயல்படுகிறார், வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது உட்பட 5 குற்றச்சாட்டுகளை கூறிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தன. இது தொடர்பான தீர்மானத்தை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் கொடுத்தன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்  மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  ஆகிய 7 கட்சிகளை சேர்ந்த 64 மாநிலங்களவை எம்பி.க்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த தீர்மானத்தை ஏற்பது பற்றி சட்டம் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் கஷ்யாப், முன்னாள் சட்டத்துறை செயலாளர் மல்கோத்ரா, முன்னாள் அட்வகேட் ஜெனரல் பராசரன் உட்பட பலரிடம் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த விவகாரம் குறித்து பேசிய வெங்கையா நாயுடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சட்ட நிபுணர்கள், அரசியல் சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் நடத்திய ஆலோசனையில் கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் இந்த பதவி நீக்கம் தீர்மானம் ஏற்கப்படுவதற்கு தகுதியானது அல்ல என்ற உறுதியான முடிவுக்கு வருகிறேன். ஆகவே, இந்த தீர்மானத்தை அனுமதிக்காமல் நிராகரிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கக் கூடியதாகவோ அல்லது ஏற்கக் கூடியதாகவோ இல்லை என்றும் தனது உத்தரவில் அவர் தெரிவித்தார். இதனையடுத்து தங்களுடைய பதவி நீக்க தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி அவை ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் தலைமை நீதிபதி தகுதி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட முடிவு என்று  வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸ் வழங்கி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...