×

ரயில் டிக்கெட்டுகளில் தமிழில் பயண விவரம் அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது

சென்னை : தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழியான தமிழிலும் பயண விவரங்கள் அச்சிட்டு அளிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் ரயில்வே துறையை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, எஸ்கலேட்டர், லிப்ட் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பயணிகள் ரயில் டிக்கெட்டுகளில் சிறிது மாற்றம் கொண்டுவர ரயில்வே துறை முடிவெடுத்தது. இதன்படி ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் ஊரின் பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக இந்த முறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய 4 ரயில் நிலையங்களில் சோதனை முறையில் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து இந்தவார இறுதி முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியுடன் தமிழ் மொழியிலும் பயண விவரம் மட்டும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவதால் ஆங்கிலம், இந்தி தெரியாத உள்ளூர் பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். தமிழில் பயண விவரங்கள் அளிக்கும் புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி...