×

காவிரி தண்ணீருக்கு ஏங்கும் பொதுமக்கள் : குடங்களுடன் அலையும் நிலை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராயபாளையத்தில் ஒரு பகுதியில் தராளமாக வரும் காவிரி கூட்டுக்குடிநீர் மற்றொரு பக்கம் சுத்தமாக எட்டி பார்க்காததால் பொதுமக்கள் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ராயபாளையம் ஊராட்சியில் சுமார் 1200 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஊரின் மையத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் காவிரி நீர் தடையின்றி கிடைக்கிறது. அதேநேரத்தில் ராயபாளையத்தின் மேற்கு பகுதி மற்றும் காலனி பகுதி மக்களுக்கு சொட்டு தண்ணீர் கூட  கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் குடங்களை எடுத்து கொண்டு மையபகுதிக்கு வருகின்றனர்.

ஆனால் இங்குள்ள மக்கள் பிடித்த பின்பு தான் இவர்கள் பிடிக்க வேண்டியுள்ளது. அதற்குள் தண்ணீர் நின்று விடுகிறது. இதுகுறித்து ராயபாளையம் காலனியை சேர்ந்த கண்ணம்மா கூறுகையில், ‘‘காலனி பகுதியில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் பைப் லைன் கனரக வாகனங்கள் சென்றதால்உடைப்பு ஏற்பட்டு குழாய் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அன்றிலிருந்து இன்று வரை காவிரி தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். பைப் லைன் உடைந்த இடத்தினை இதுவரை சரிசெய்யவில்லை. ஆங்காங்கே உடைந்து வெளியேரும் தண்ணீரினை ஊற்றில் பிடிப்பது போல் பிடித்து வருகிறோம்’’ என்றார். திருமங்கலம் பிடிஓ ராஜேந்திரனிடம் கேட்ட போது, ‘‘விரைவில் லைப் லைன்கள் சரிசெய்யப்பட்டு ராயபாளையம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழிசெய்யப்படும்’’ என்றார்.

Tags :
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி