×

கொடைக்கானல் அருகே நூற்றுக்கணக்கில் அனுமதியின்றி கட்டப்படும் புதிய கட்டிடங்கள்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியில் அரசின் அனுமதி பெறாமல் நூற்றுக் கணக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவது அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொடைக்கானலை ஒட்டிய ஊராட்சிப் பகுதிகளில் 7 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே கட்டிடங்கள் கட்ட வேண்டும் என விதி உள்ளது. முன்னாள் ஊராட்சி நிர்வாகிகள் தங்கள் பதவிக்காலத்தில் அரசின் பதிவேடுகளில் பதியாமல் நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். தற்போது இந்த கட்டிட வேலைகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ளது.

கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் அனைத்தும் கட்டிட உரிமையை புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால், வில்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பதிவேடுகளில் பதியாமல் உள்ளதால் பல கட்டிடங்களுக்கு அனுமதி பெறாத கட்டிடங்கள் என்று அரசு அதிகாரிகள் அறிக்கை கொடுத்து வருகின்றனர். ஏற்கெனவே தங்களது கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று விட்டோம் என்று எண்ணியிருந்த கட்டிட உரிமையாளர்கள் அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டு வரும் இந்த அறிக்கையால் அதிர்ச்சியடைந்தனர். மேலும் எவ்வாறு கட்டிட உரிமங்களைப் புதுப்பிப்பது என்றும் விடை தெரியாமல் உள்ளனர்.

வில்பட்டி, கோவில்பட்டி, பேத்துப்பாறை, அஞ்சு வீடு, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், கணேஷ் நகர் உள்ளிட்ட வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களிலும் இந்நிலை நீடித்து வருகிறது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது “புதிதாக கட்டிடம் கட்டி வரும் உரிமையாளர்கள் அரசு பதிவேடுகளில் பதிய உரிய அலுவலக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்றார்.

Tags :
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...