×

இரட்டை குழல் துப்பாக்கி சர்ச்சை : கூட்டுத் தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை என நாளிதழில் விளக்கம்

சென்னை : வாசகர் கட்டுரையை அடிப்படையாக  கொண்டு அதிமுக- பாஜக இடையே கூட்டணி என்பது போன்ற குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுவதாக ஏப்ரல் 22ம் தேதி நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில்  வெளியான கட்டுரை அரசியல் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. சர்ச்சை தொடர்பாக நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் இன்று வெளியாகி உள்ள விளக்கத்தில், பாஜக அதிமுக இடையிலான அரசியல் கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அல்லது அதில் வெளியாகும் அரசியல் கட்டுரைகளோ  முடிவு செய்ய முடியாது  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கட்டுரையை அடிப்படையாக கொண்டு அதிமுக - பாஜக இடையே கூட்டணி என்பது போன்ற ஒரு குழப்பத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிமுக அதிகாரப் பூர்வ தலைமை கழக அறிவிப்புகள் இன்றி நாளிதழில் வெளியாகும் கட்டுரைகளின் கருத்துக்கள் கட்சியின் முடிவுகளை பிரதிபலிப்பவை இல்லை என்றும் பெரும் தொண்டர்களை கொண்ட அதிமுக கூட்டுத் தேடி அலைய வேண்டிய தேவை இல்லை என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது காவிரி விவகாரத்தில் நல்லதொரு தீர்வை தரும் என்பதை சுட்டிக்காட்டவே மத்திய மாநில அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுவதாக கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும் குழப்பங்களை  வித்திடும் வகையில் ஒப்புதலின்றி கட்டுரையை பிரசுரித்ததற்காக அதற்கு உரியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை...