×

பிட்காயின் மூலம் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை தொழிலதிபரை கடத்தி பணம் பறித்த போலீசார்

அகமதாபாத் : குஜராத்தில் தொழிலதிபரை கடத்தி பிட்காயின் பறிக்கப்பட்டது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். மேலும், எஸ்பி.யிடம் விசாரணை நடத்தப்படுகிறது.  குஜராத்தில் கடந்த  பிப்ரவரி 9ம் தேதி கடத்தப்பட்ட தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் சில போலீஸ் அதிகாரிகளை சிஐடி கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் சைலேஷ் பட் தன்னுடைய புகாரில், ‘கடந்த பிப்ரவரி 9ம் தேதி காந்தி நகரில் ஒரு ஒட்டலில் இருந்து சில போலீசார் என்னை கடத்தி வலுக்கட்டாயமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான 200 பிட்காயின்களை மின்னணு பரிமாற்றம் செய்தனர்’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிஐடி போலீசார், கடந்த 8ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு, அம்ரேலி மாவட்ட இன்ஸ்பெக்டர் ஆனந்த் படேலை கைது செய்தனர். இவருடன் சேர்த்து 9 போலீசார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், அம்ரேலி மாவட்ட எஸ்பி ஜெகதீஷ் படேலிடம் சிஐடி போலீசார்  விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். தொழிலதிபர் கடத்தப்பட்டு, பிட்காயின் மற்றும் பணம் பறிக்கப்பட்ட வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  தற்போது, ஒரு பிட்காயினின் மதிப்பு ₹5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags :
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...