×

ராணுவ பயன்பாட்டுக்கு செயற்கைகோள்: இஸ்ரோ தகவல்

புதுடெல்லி: ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் வகையில் விரைவில் புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2013ம் ஆண்டு ஜிசாட்-7 அல்லது ருக்மணி என்ற செயற்கைகோளை செலுத்தியது. இது பிரத்யேகமாக கடற்படைக்காக மட்டும் செலுத்தப்பட்டது. இதேபோல்,  ராணுவத்துக்கு உதவும் வகையில் புதிய செயற்கைகோளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ₹800 கோடி செலவில் சந்திராயன்-2 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்டை நாடுகளிடம் இருந்து எல்லை கண்காணிப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு பணியில் ராணுவத்துக்கு உதவும் வகையில் மேலும் சில முக்கிய செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்திய விமானப்படைக்காக பிரத்யேகமாக ஜிசாட்-7ஏ என்ற செயற்கைகோள் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதேபோல், கண்காணிப்பு பணிக்காக ரிசாட்-2ஏ என்ற செயற்கைகோளும் இந்த ஆண்டில் இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஜிசாட்-7ஏ செயற்கைகோள் இந்திய விமானப்படையுடன் பல்வேறு ரேடார் நிலையங்கள், விமான தளங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைப்பை ஏற்படுத்தும். மேலும், நெட்வொர்க் மையம், படை திறன்கள் மற்றும் சர்வதேச செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.

ராணுவ செயற்கைகோள்களை தவிர்த்து, இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய செயற்கைகோளான 5.7 டன் எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைகோளை ஜூன் மாதம் பிரான்சின் குவைனாவில் இருந்து அனுப்பவுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறுகையில், “இந்த அனைத்து ஜிசாட்டுகளும் இணைந்து வினாடிக்கு 100 ஜிகாபைட் வரை அதிகபட்ச அலைவரிசை இணைப்பை வழங்கும். கிராமப்புறங்களில் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்குவதோடு டிஜிட்டல் பங்கீட்டிற்கும் உதவும்” என்றார்.

Tags :
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!