×

மக்களவை தேர்தலின்போது ₹15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி வாக்குறுதி அளித்தாரா?: தகவல் அறியும் உரிமை மனுவில் அதிர்ச்சி பதில்

புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது மோடி வாக்குறுதி அளித்தது போல், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் டெபாசிட் செய்யப்படுமா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, கருப்பு பணத்தை மீட்டால் ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் ₹15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ₹500, ₹1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இது, கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று மத்திய அரசு அறிவித்தது.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 18 நாட்கள் கழித்து 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததுபோல் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் ₹15 லட்சம் எந்த தேதியில் டெபாசிட் செய்யப்படும் என்று கேட்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவுக்கு பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இது குறித்து மோகன் குமார் சர்மா தலைமை தகவல் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணையின்போது பிரதமர் அலுவலகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை தனக்கு முழு விவரத்தை அளிக்கவில்லை என்று சர்மா தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை தகவல் ஆணையர் மாதூரிடம் பிரதமர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு “தகவல்” என்ற அம்சத்தின் கீழ் வரவில்லை.

இந்த சட்டத்தின் பிரிவு-2ன் படி தகவல் என்பது, பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், இமெயில், கருத்து, செய்தி வெளியீடு, சுற்றறிக்கை, உத்தரவு, பதிவு புத்தகம், ஒப்பந்தம், அறிக்கைகள், பேப்பர், மாதிரிகள், மின்னணு வடிவத்தில் இருக்க வேண்டும். பிரதமர் மோடி இதுபோன்ற எந்த வடிவத்திலும் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை. எனவே, இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ₹15 லட்சம் ஒவ்வொருவர் கணக்கிலும் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிரதமர் அலுவலகம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை அளித்துள்ள பதில் திருப்திகரமாக உள்ளதாக தலைமை தகவல் ஆணையர் மாதூர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு: அமெரிக்கா பரபரப்பு அறிக்கை