×

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பணியில் உள்ள நீதிபதி விசாரித்தால்தான் உண்மை குற்றவாளிகள் சிக்குவார்கள்: முத்தரசன் பேட்டி

திருவாரூர்: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை மேற்கொண்டால்  மட்டுமே உண்மை குற்றவாளிகளை அடையாளம்  காணமுடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று திருவாரூரில் நடைபெற்ற மனித  சங்கிலி போராட்டத்தில் கலந்து  கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம்  கூறியதாவது,
காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது.

மாநில உரிமைகளை காக்க வேண்டிய தமிழக அரசு  அதனை மறந்து மத்திய அரசு இழைக்கும் துரோகத்திற்கு துணை போவது கடும் கண்டனத்திற்குரியது. மாணவிகளை தவறான வழிக்கு  அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மற்றும் அரசுதரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த  இரண்டு விசாரணையும் பயன் அளிக்க போவதில்லை. எனவே  பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை மேற்கொண்டால் மட்டுமே  உண்மை குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும்.  எச்.ராஜா மற்றும் எஸ்வி.சேகர் போன்றவர்கள்  பெண்கள் குறித்து தவறாக  பேசிவருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தமிழக அரசு அஞ்சுகிறது என்பது தெரியவில்லை. உடனடியாக  இருவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...