×

வடகொரியாவில் சாலை விபத்து சீன பயணிகள் 32 பேர் சுற்றுலா சென்றபோது பலி

பீஜிங்: வடகொரியாவில் பேருந்து கவிழ்ந்ததில் சீன சுற்றுலா பயணிகள் 32 பேர் உள்பட 36 பேர் பலியாகினர். வடகொரியாவிற்கு சுற்றுலா மூலம் ஆண்டிற்கு 2.9 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இந்நாட்டிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினரில் 80 சதவிகிதத்தினர் சீனர்கள் ஆவர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சீனர்கள் வடகொரியாவிற்கு சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு ஹவாங்கே மாகாணத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில், சீனாவில் இருந்து வடகொரியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட சீன பயணிகள் 32 பேர் மற்றும் வடகொரிய நாட்டினர் 4 பேர் என 36 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 2 சீனர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கேசாங் நகரிலிருந்து தலைநகர் பியாங்யாங்கிற்கு சென்றபோது பாலத்திலிருந்து பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சீனாவின் அரசு தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று செய்தி வெளியிட்டது. இதில், 30 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த செய்தி நீக்கப்பட்டது. மற்றொரு தொலைக்காட்சியில் விபத்து நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. மழைக்கு இடையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை இரவு விபத்து நிகழ்ந்தவுடன் சீன தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சீன அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததாக வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

Tags :
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது