மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் சிக்கினார்

* சிபிசிஐடி 5 மணிநேரம் ‘கிடுக்கிப்பிடி’
* நிர்மலாதேவி இன்று கோர்ட்டில் ஆஜர்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் நேற்று சிபிசிஐடியிடம் சிக்கினார்.  இவரிடம் போலீசார் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதனிடையே 5 நாள் காவல் விசாரணை முடிந்து நிர்மலாதேவி இன்று  கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக  கைதானார். இவரை சிபிசிஐடி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முக்கிய விஐபிக்கள், மதுரை  காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள், பேராசிரியர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கில் மதுரை காமராஜர்  பல்கலை. உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர்.

மதுரை ஒத்தக்கடையில் வசிக்கும் முருகன், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நாடாகுளம் கிராமத்தில் வசிக்கும் கருப்பசாமி வீடுகளிலும்  சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். நாடாகுளம் கிராமத்தில் 2 நாட்களுக்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர்.  தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில், வருகை பதிவேட்டில் கையெழுத்திட உதவி பேராசிரியர் முருகன் நேற்று காலை 11 மணியளவில் மதுரை  காமராஜர் பல்கலைக்கழகம் வந்தார். அங்கு காத்திருந்த சிபிசிஐடி போலீசார், அவரை சுற்றிவளைத்தனர். பின்னர் அவரிடம் தனி அறையில் சிபிசிஐடி  இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள  சிபிசிஐடி அலுவலகத்தில், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கினர். இதைத்தொடர்ந்து முருகன் நேற்று பகல் 1.30 மணிக்கு விருதுநகர்  சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் 2 வக்கீல்களும் ஆஜராயினர். அவரிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை  நடத்தினர். இவரிடம் தொடர் விசாரணை நடத்தினால்,  இவ்வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் அம்பலமாகும். இதனால் இவ்விவகாரத்தில்   தொடர்புடைய விஐபிக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

4ம் நாளாக விசாரணை: அதே அலுவலகத்தில் 4வது நாளாக நேற்று பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார்  விசாரணை நடத்தினர்.  கடந்த 21ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான நிர்மலாதேவி சகோதரர் ரவி நேற்று இரண்டாவது முறையாக ஆஜரானார். இன்றுடன் 5 நாள்  விசாரணை நிறைவடைய உள்ளதால், மாலை நிர்மலாதேவி சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.நாளை முதல் காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்கப்பயிற்சி இயக்குர் கலைச்செல்வன், உதவி பேராசிரியர் முருகன் உள்ளிட்ட பலரிடம் தொடர்  விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்க நிர்மலாதேவி மறுப்பு
சிபிசிஐடி விசாரணைக்கு நிர்மலாதேவி ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு  ‘ஆம்’, ‘இல்லை’ என  ஒற்றை வார்த்தையில் பதில் தருவதாக கூறுகின்றனர். விளக்கமான பதில்களை தருவதில்லை. இதனால், விசாரணையில் சிக்கல் ஏற்படுவதாக  சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்

‘பொறுத்தால் உண்மை வெளிப்படும்’l துணைவேந்தர் பேட்டி
அருப்புக்கோட்டை அருகே,  செட்டிகுறிச்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில்  கலந்து கொண்ட துணைவேந்தர் செல்லத்துரை நிருபர்களிடம் கூறுகையில், ‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவ, மாணவிகளின் நலன்   காக்கும் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது’ என்றார். அப்போது, ‘காமராஜர்  பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும்,  எதிராக மற்றொரு  தரப்பினரும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே’ என்று கேட்டதற்கு, ‘அதுபற்றி எனக்கு தெரியாது’ என்றார்.

மேலும், ‘‘பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பு பேச்சு என்பது  வேறு.  உண்மை என்பது வேறு. பொறுமை காத்தால் நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மை வெளிப்படும்,’’ என்றார்.

யார் இந்த முருகன்?
சிபிசிஐடியிடம் சிக்கிய உதவி பேராசிரியர் முருகன்  சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவாளர்   சின்னையாவை வழிகாட்டியாக கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் பி.எச்டி  முடித்துள்ளார். பதிவாளரின் ஆதரவுடன் காமராஜர் பல்கலைக்கழக  மேலாண்மைத்துறையில்  உதவி பேராசிரியர் பணியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்துள்ளார். மதுரை  ஒத்தக்கடை பகுதியில் தற்போது வசித்து  வருகிறார். இவரது மனைவி பத்திரப்பதிவு  துறையில் அதிகாரியாக உள்ளார்.

× RELATED சேலம் மாவட்டம் கூலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு