×

தனியார் பள்ளிகளுக்கு இணையவழி அங்கீகாரம்: புதிய இணைய சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை:  தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தனியார் பள்ளிகளை நிர்வாகம் செய்வதற்காக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்று தனியாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. தனியார் சுயநிதியின் கீழ் இயங்கும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ்தான் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை பள்ளிகள் புதிதாக தொடங்கும்போதும் அங்கீகாரம் பெறுவதும், தொடங்கிய பிறகு அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மூன்றாண்டுக்கு ஒரு முறையோ அல்லது தொடர் அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பணிகளை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம்தான் செய்து வருகிறது. இதற்காக, அந்தந்த பள்ளிகளின் நிர்வாக தரப்பில் யாராவது ஒருவர் சென்னைக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மேற்கண்ட பணிகளை செய்ய வேண்டிய நிலை இதுவரை இருந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு, சென்னைக்கு வராமலேயே அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் இணைய தளம் மூலம் தங்களுக்கு தேவையான வசதிகளைப் பெற புதிய இணைய  தளத்தை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது. தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளை பெறும் சேவைகளை இணைய தளம் மூலமாக பெறும் வகையில், இணைய முகப்பினையும் (போர்ட்டல்), அலுவலர்களுக்கான செயலியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். http://tnschools.gov.in என்ற வலைதளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான இணைய முகப்பு வாயிலாக (http://tnschools.gov.in/dms/?lang=en) சுயநிதிப் பள்ளிகள் தொடங்குவதற்கான அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்க அனுமதி, கூடுதல் பிரிவுகள், மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள், பள்ளி நிர்வாக மாற்றத்திற்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளையும் இணையம் வழியாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பள்ளிகள் அரசின் உரிய அனுமதியை ஒளிவுமறைவற்ற வகையில் வெளிப்படையாகவும் விரைவாகவும் பெற இயலும். இதனால் சுமார் 15,000 சுயநிதிப் பள்ளிகள் தங்கள் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ளவும் முடியும். இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post தனியார் பள்ளிகளுக்கு இணையவழி அங்கீகாரம்: புதிய இணைய சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : CM ,Chennai ,Tamil Nadu ,Directorate of Matriculation Schools ,Dinakaran ,
× RELATED குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62...