மும்பை: மும்பையை சேர்ந்த நடிகை அதிதி சர்மா (29), கடந்த 2021ம் ஆண்டு ஆன்லைன் நடிப்பு பயிற்சியின் போது நடிகர் அபினீத் கவுசிக்கை காதலித்தார். கோரேகானில் சுமார் 3 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2024ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அபினீத் கவுசிக், அதிதி சர்மா அணிந்த ஆடைகளை கடுமையாக விமர்சித்தும், வீட்டு பிரச்னைகளுக்காக சண்டை போட்டுக்கொண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் அதிதி சர்மாவிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டது மட்டுமின்றி, அவரது செல்போனை தேவையின்றி அடிக்கடி சோதனையிட்டு வந்ததாக கூறப்பட்டது. கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி நடந்த தகராறில், அதிதி சர்மாவை அபினீத் கவுசிக் ஆபாசமாக திட்டி கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த கொடுமைகளுக்கு மாமியார், நாத்தனார் ஆகியோரும் உடந்தையாக இருந்து, தனக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி அதிதி சர்மா கோரேகான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், தனது திருமண சீதனமாக வழங்கப்பட்ட 2 தங்கச்சங்கிலிகள், 4 தங்க மோதிரங்கள், 1 வைர மோதிரம், 1 தங்க மாங்கல்யம், 2 தங்க வளையல்கள் ஆகியவற்றை மாமியார் குடும்பத்தினர் சட்டவிரோதமாக பறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நம்பிக்கை மோசடி, கூட்டு சதி, திட்டமிட்டு அவமதித்தல், பெண் கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ், அதிதி சர்மாவின் கணவர் அபினீத் கவுசிக், மாமியார், நாத்தனார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
