×

ஒடிசி ஏற்படுத்திய தாக்கம் இந்தியாவில் ஐமேக்ஸ் 70 எம்எம் தியேட்டர்கள் வருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

 

கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒடிசி’ திரைப்படம் கடந்த 17ம் தேதி திரைக்கு வந்தது. ஐமேக்ஸ் 15/70எம்எம் அனலாக் பிலிம் கேமராக்களால் இப்படம் படமாக்கப்பட்டது. ரசிகர்கள் இதனை 1.43:1 என்ற பிரம்மாண்டமான சதுர வடிவிலான திரையில் பார்க்க வேண்டும் என்று நோலன் விரும்பினார். உலகிலேயே 41 தியேட்டர்களில்தான் இந்த வசதி இருக்கிறது. இந்தியாவில் உள்ள 34-க்கும் மேற்பட்ட ஐமேக்ஸ் திரையரங்குகள் அனைத்தும் டிஜிட்டல் தியேட்டர்கள் ஆகும். அவற்றில் 1.90:1 என்ற செவ்வக வடிவத்தில்தான் படம் திரையிடப்படுகிறது. ஐமேக்ஸ் 70எம்எம் பிலிம் புரொஜெக்டர்கள் இந்தியாவில் உள்ள தியேட்டர்களில் இல்லை. இதனால், நோலன் வடிவமைத்த அதே முழுமையான காட்சி அனுபவத்தை இந்திய ரசிகர்களால் பெற முடியவில்லை.

‘ஒடிசி’ படம் வெளியானதிலிருந்து ரசிகர்களின் ஒரே குமுறல், ஐமேக்ஸ் 70எம்எம் படத்தை அந்த விஷுவல் அனுபவத்துடன் பார்க்க முடியவில்லையே என்பதுதான். சோஷியல் மீடியா முழுக்க இதுபற்றிய பேச்சாகத்தான் தற்போது இருந்து வருகிறது. இந்தியாவின் ஒரே ஒரு அசல் 70எம்எம் ஐமேக்ஸ் திரை, அகமதாபாத்தில் உள்ள குஜராத் சயின்ஸ் சிட்டியில் அமைந்துள்ளது. இது அரசு அறிவியல் மையம் என்பதால், இங்கு விண்வெளி மற்றும் இயற்கை சார்ந்த அறிவியல் ஆவணப்படங்கள் மட்டுமே திரையிடப்படுகின்றன.

கடந்த 2000-களின் தொடக்கத்தில் இந்தியாவில் ஐந்து 70எம்எம் ஐமேக்ஸ் தியேட்டர்கள் இருந்தன. மும்பை ஐமேக்ஸ் அட்லாப்ஸ், மும்பை பிரசாத்ஸ் ஐமேக்ஸ், ஐதராபாத், கொல்கத்தா, காசியாபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் இருந்தன. ஆனால், 70எம்எம் பிலிம் ரீல்களைப் பராமரிப்பதற்கான அசுரக் கட்டணம், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் திரைப்படங்கள் டிஜிட்டல் வடிவிற்கு மாறியதால், அனைத்து தியேட்டர்களும் தங்களது 70எம்எம் ப்ரொஜெக்டர்களை நீக்கிவிட்டு டிஜிட்டல் திரையரங்குகளாக மாறிவிட்டன.

இந்தியாவில் தற்போது இருக்கும் தியேட்டர்களில் ஐமேக்ஸ் 70எம்எம் திரையைக் கொண்டு வருவது நடைமுறை மற்றும் வணிக ரீதியாக இதற்கு பலவித சவால்கள் உள்ளன.தற்போதுள்ள ஒரு மல்டிபிளக்ஸ் அல்லது ஒரு பெரிய ஒற்றைத் திரை (Single Screen) தியேட்டரை 70எம்எம் ஐமேக்ஸ் தியேட்டராக மாற்றுவதில் கட்டிடத்தின் உயரம் மற்றும் இடவசதி பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான தற்போதைய ஐமேக்ஸ் திரையரங்குகள் மால்களுக்குள் அமைந்துள்ளன.

அவற்றின் கூரை உயரம் வெறும் 30 முதல் 40 அடி மட்டுமே. எனவே, மால்களின் கூரையை இடித்துவிட்டு 8 மாடி உயரத்திற்கு இடத்தை உருவாக்குவது சாத்தியமற்றது. தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு பெரிய ஒற்றைத்திரை தியேட்டரை (உதாரணமாக சென்னையின் ஆல்பர்ட் அல்லது தேவி தியேட்டர் போன்ற பெரிய தியேட்டர்கள்) முழுமையாக இடித்துவிட்டு, ஐமேக்ஸ் 70எம்எம் அளவிற்கான உயரத்துடன் புதிய கட்டிடமாகத் கட்டினால் மட்டுமே இது சாத்தியம்.

தற்போதைய டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள் ஒரு சிறிய அலமாரி அளவில் மட்டுமே இருக்கும். ஆனால், 70எம்எம் பிலிம் ப்ரொஜெக்டர் அதைவிட பெரியது. 3 மணி நேரத் திரைப்படத்தின் பிலிம் சுருள்கள் மட்டுமே 300 கிலோவிற்கும் மேல் எடை கொண்டதாக இருக்கும். தற்போதைய தியேட்டர்களில் உள்ள சிறிய ப்ரொஜெக்டர் அறைகளில் இந்த இயந்திரங்களை வைக்கவே முடியாது. இதற்காக அந்த அறையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.

அத்துடன் ஆடியோ சிஸ்டத்தை முற்றிலும் மாற்றுதல், ஐமேக்ஸின் லேசர் ஒலியமைப்பை நிறுவுதல், இருக்கைகளின் அமைப்பை செங்குத்தாக மாற்றுதல் (ஐமேக்ஸ் அனுபவத்திற்கு இருக்கைகள் திரைக்கு மிக அருகில் மற்றும் செங்குத்தாக இருக்க வேண்டும்). தியேட்டரை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டினால் மட்டுமே சாத்தியமே தவிர, இருக்கும் அமைப்பிற்குள் 70எம்எம் ஐமேக்ஸ் திரையை நுழைப்பது சாத்தியமில்லை. ஒரு வணிகரீதியான அசல் ஐமேக்ஸ் 70எம்எம் தியேட்டரை இந்தியாவில் புதிதாக உருவாக்க அல்லது கட்டமைக்க தோராயமாக ₹25 கோடி முதல் ₹40 கோடி வரை (நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து) செலவாகும்.

* இந்திய படங்களில்…

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படம் முழுமையாக ஐமேக்ஸ் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் கேமராக்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காகவே இந்தியாவில் புதிய லேசர் ஐமேக்ஸ் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ராமாயணா: பாகம் 1’ படமும் இதே வடிவில் தயாராகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஐமேக்ஸ் 70எம்எம் கேமராக்களிலும் இந்திய படங்கள் உருவாகும் நிலை உள்ளது.

* ஹாலிவுட்டின் எதிர்காலம் இதுதான்

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் கிளிஃப் பூத்’ படத்தில் பிராட் பிட் நடிக்கிறார். இந்தாண்டு நவம்பரில் வெளியாகும் இப்படம் ஐமேக்ஸ் 70எம்எம் கேமராவில் உருவாகியுள்ளது. ‘டியூன்: பாகம் 3’ இதே தொழில்நுட்பத்தை கொண்டது. இப்படம் இந்தாண்டு டிசம்பர் 18 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘சின்னர்ஸ்’ படத்திலும் ஐமேக்ஸ் 70எம்எம் ஃபிலிம் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர டாம் க்ரூஸ் நடிப்பில் விண்வெளியில் உருவாகும் படம் உள்பட மேலும் சில ஹாலிவுட் படங்களும் இந்த தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றன. இதனால் உலகம் முழுவதுமே இந்த தொழில்நுட்ப தியேட்டர்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

Tags : India ,Christopher Nolan ,Nolan ,
× RELATED எழுத்தாளர்கள் சங்க தலைவர் ஆனார் சேரன்