கட்டா குஸ்தி 2 படம் பற்றி ரூட் மாஃபியா வன்மம் விஷ்ணு விஷால் பரபரப்பு பேட்டி

சென்னை: விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, சினிமாவில் நடித்தபோது, மற்ற ஹீரோக்களின் படங்களை தரக்குறைவாக விமர்சித்து அந்த படங்களை காலி செய்யும் வேலையை ரூட் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இது விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் நடத்தும் நிறுவனமாகும். இதனால் தமிழ் சினிமா துறையில் இந்த நிறுவனத்துக்கு ‘ரூட் மாஃபியா’ என்ற அடைமொழி இருக்கிறது. அதன்படி, அவர்கள் மற்ற ஹீரோக்களின் இமேஜை சரிவடைய செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது, விஜய் என குறிப்பிட்டார். உடனே அவரது ரசிகர்கள், முதல்வர் விஜய் எனக் குறிப்பிடாமல் விஜய் என்று சொல்வதா என விஷ்ணு விஷாலை தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடினர். இந்த விவகாரத்தை ரூட் மாஃபியா கையில் எடுத்து, விஷ்ணு விஷாலை குறி வைத்து தாக்க ஆரம்பித்தது. இ்நநிலையில்தான் கடந்த வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கட்டா குஸ்தி 2’ படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரூ.15 கோடியில் உருவான இந்த படம், 4 நாட்களில் ரூ.25 கோடி வசூலை குவித்துள்ளது. இதற்கிடையே இந்த படம் வெளியான நாளில் இருந்து, படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை ரூட் மாஃபியா நிறுவனம் பரப்பி வருகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷால் கலந்துகொண்ட நிகழ்வில், ‘இந்தப் படத்துக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களை அளித்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அவர் கூறும்போது, “தவெகவைச் சேர்ந்தவர்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பி வருகிறார்கள். அதை நான் பார்த்தேன். கஷ்டமாக இருந்தது. அதைப்பற்றி பேச விரும்பவில்லை. இதை அரசியலாக மாற்ற விரும்பவில்லை. கட்டா குஸ்தி 2 மக்களுக்கு பிடித்துள்ளது. ஆன்லைன் சோசியல் மீடியாவில் இருக்கும் இந்த வன்மம் குறித்து நான் முன்பே பேசிவிட்டேன். இப்போதும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

ஆன்லைன் வன்மம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்கு எதிராக நான் குரல் கொடுத்துள்ளேன். ஆன்லைன் வன்மம் நல்லதில்லை. நான் கூறிய கருத்தில் எப்போதும் உறுதியாக இருப்பேன். ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியில்லை. சமூகம் மாற வேண்டும் என நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சமூக வலைதளங்களில் வேறு மாதிரியான விஷயங்கள் நடந்து வருகிறது.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நான் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமாகத்தான் பார்க்கிறேன்.
2013-ம் ஆண்டிலிருந்து அவர்களுடன் எனக்கு பழக்கம். அவர்களுக்கும் எனக்கும் சமமான உறவு உள்ளது. அதனால் இந்தப் படத்தை அவர்களை வைத்து ரிலீஸ் செய்தேன். எனக்கு ஆதரவாக இருந்தார்களோ அவர்களுடன் இணைந்து படத்தை வெளியிட்டேன். இதிலும் அரசில் செய்கிறார்கள். இந்த அரசியல் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: