தெலுங்கு முன்னணி நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தனது இளமைக்கால வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், ‘எனது 17 வயதில் நக்சலைட் இயக்கத்தில் சேருவது குறித்து தீவிரமாக யோசித்தேன். துப்பாக்கியை கையில் எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அப்போது எனக்குள் இருந்த கோபம் மற்றும் அநீதிக்கு எதிரான உணர்வுதான் இதுபோன்ற எண்ணத்துக்கு காரணமாக இருந்தது. நக்சலைட்டாக வேண்டும் என்ற விருப்பம் 17 வயது முதல் 21 வயது வரை என்னுள் நீடித்தது. அந்த காலக்கட்டத்தில் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தேன்.
அப்போது எனது அண்ணன் சிரஞ்சீவி, ‘உனக்கு இந்த கோபம் எங்கிருந்து வருகிறது?’ என்று கேட்க, ‘அநீதிக்கு எதிராக பேசுகிறேன்’ என்றேன். அதை கேட்டு வருத்தப்பட்ட அவர், ‘உனது சகோதரர் சிரஞ்சீவியாக இல்லாமல் இருந்திருந்தால், உனக்கு குடும்ப பொறுப்புகள் இருந்திருந்தால், உனது சம்பளத்தையும் மற்றும் உழைப்பையும் நம்பி குடும்பம் இருந்திருந்தால், நீ இந்த முடிவை எடுத்திருப்பாயா?’ என்று கேட்டார். இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அமைதியாக இருந்தேன். அவரது கேள்விதான் எனது சிந்தனையை மாற்றியது’ என்று சொன்னார்.
