
ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ என்ற படத்தில், ஜான்வி கபூரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியானது. இதையடுத்து இயக்குனர் புச்சி பாபு சனா பகிரங்க மன்னிப்பு கேட்டார். உடனே அனசூயா பரத்வாஜ், ‘இது நல்ல மாற்றம்’ என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து டிம்பிள் ஹயாதி கூறுகையில், ‘ஒரு படத்தில் பெண்ணின் கதாபாத்திரம் கவர்ச்சியாகவோ அல்லது வலுவில்லாமலோ காட்டப்பட்டால், அதற்கு அந்த நடிகையை குறை சொல்வதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. இதற்கு கதை எழுதியவரும், அதை இயக்கியவரும்தான் பொறுப்பு.
திரையுலகில் தங்களை தக்கவைத்துக்கொள்ளவும், அடுத்தடுத்த நிலைக்கு செல்லவும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பல நடிகைகள் இருக்கின்றனர். ஒரு படத்தில் கிளாமராக நடித்துவிட்டால், அடுத்து அதுபோன்ற கதாபாத்திரங்களே நடிகைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவர்களின் உண்மையான நடிப்புத்திறமை இதனாலேயே பல நேரங்களில் முடக்கப்படுகிறது. ஹீரோக்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை’ என்றார்.

