திருச்சி பொன்மலைக்கோட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபி ளாக பணியாற்றுகிறார், கோட்டை கருப்பசாமி என்கிற பிரசாந்த் பாண்டியராஜ். விசாரணைக்கு வந்த ஒரு கைதியை அவர் அடித்ததால், லாக்கப்பிலேயே அந்த கைதி இறந்துவிடுகிறார். ஜெயப்பிரகாஷ் தலைமையிலான சிறப்புக்குழு, அந்த கொலையை பற்றி விசாரிக்கின்றனர். ஒரு சாதாரண காவலராக இருந்த கோட்டை கருப்பசாமி, ஒரு கைதியை கொடூரமான முறையில் அடித்து கொல்லக்கூடிய அளவுக்கு என்ன நடந்தது என்பது மீதி கதை.
குறைந்த மார்க் எடுத்து அரசு வேலைகளை தவறவிடும் பிரசாந்த் பாண்டியராஜ், காவலராக பதவியேற்ற பிறகு நடந்துகொள்ளும் விதம் அவரது கேரக்டரை சுவாரஸ்யமாக்குகிறது. தொடர்ந்து தோல்வியை தழுவி, இறுதியில் வெற்றிக்கோட்ைடயை கைப்பற்றும் அவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. முதல் தொடரிலேயே தேறிவிடுகிறார். அவரது தந்தை பாலாஜி சக்திவேல், மாமா காளி வெங்கட், போலீஸ் அதிகாரி அருள்தாஸ், நீதிபதி பஞ்சமி மற்றும்
எம்.வி.அருள்ஜோதி, சாயாதேவி, நம்ரிதா, மீனா, கவுசல்யா, வையாபுரி, ஹலோ கந்தசாமி, பூர்ணிமா ரவி உள்பட அனைவரும் நன்கு நடித்து தொடருக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளனர். திருச்சியில் நடக்கும் காட்சிகளை படமாக்கிய அசோக் குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி. ஆர்.ராமரின் எடிட்டிங் கச்சிதம். சாம் சி.எஸ் பின்னணி இசை சிறப்பு. காவல்துறையில் தரப்படும் அழுத்தங்களை மீறி, ஒரு சாதாரண காவலர் எப்படி ஜெயிக்கிறார் என்பதை 8 எபிசோடுகளில் சொன்ன இயக்குனர் விக்னேஷ் நடராஜன், தவறான வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது நெருடுகிறது. ஜீ5 ஓடிடி தளத்தில் இத்தொடர் ஒளிபரப்பாகிறது.
