சென்னை: சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் பான் வேர்ல்ட் படத்தின் தலைப்பு ‘ராக்கா’ என வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘ஏஏ 22 ஏ6’ (அல்லு அர்ஜுனின் 22வது படம், அட்லியின் 6வது படம்) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இது பான் வேர்ல்ட் படமாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் இன்று பகல் 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் சினிமா ரசிகர்களும் அல்லு அர்ஜுன் ரசிகர்களும் ஆவலுடன் படம் குறித்த இந்த அப்டேட்டுக்காக காத்திருந்தனர். இதையொட்டி நேற்று வெளியிடப்பட்ட போஸ்டரில் ஒரு மிருகத்தின் கை மட்டும் இருக்கும் வகையில் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதுவும் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் ‘ராக்கா’ என்ற தலைப்புடன் பாதி மிருக தோற்றத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தின் தலைப்பும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
