குடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு

ஐதராபாத் : குடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாம் குடிக்கும் குடிநீரில் புளூரைடு உப்பு உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மிலி கிராம் அல்லது 1.5 மில்லி கிராமுக்கு குறைவாக புளூரைடு உப்பு கலந்திருந்தால் அது சரியான குடிநீர். இந்த அளவை தாண்டி புளூரைடு உப்பு குடிநீரில் சேர்ந்தால் எலும்பு நோய், பல் நோய், வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகி விடும். எனவே, புளூரைடு அளவாக கலந்த குடிநீரை அனைவரும் பருகுவது முக்கியம். பற்பசைகளில் கூட புளூரைடு அளவு பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம்.
Advertising
Advertising

ஆனால், இந்தியாவில் 17 மாநிலங்களில் புளூரைடு நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி குடிநீரில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் இந்த அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அளவை குறைப்பது குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐதராபாத் ஐஐடியில் உள்ள வேதியியல் பொறியியல் குழுவினர் துணை பேராசிரியர் சந்திரசேகர் சர்மா தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியில் நாவல்பழ விதைகளை பொடியாக்கி புளூரைடு சதவீதம் அதிகம் உள்ள நீரில் கலந்தால், அதன் அளவை நீக்கிவிடுவதை கண்டுபிடித்துள்ளனர்.

நாவல்பழ விதை பொடி கார்பன் பொருளாக பயன்படுகிறது. இதை குடிநீரில் கலந்து கொதிக்க வைத்தால், அதில் உள்ள புளூரைடு குறைந்துவிடுகிறது. இந்த முறையால் பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவரும் பயன்படுத்த முடியும் என்று பேராசிரியர் சர்மா தெரிவித்தார். தற்போது, ரம்யா ஆரகா தலைமையிலான குழுவினர், நாவல்பழ விதை பொடியை பயன்படுத்தி எந்தவகையான குடிநீர் மாசுவை போக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Related Stories: