×

கதையை மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு: கதாசிரியருடன் வரலட்சுமி கடும் மோதல்

ஐதராபாத்: நடிகையும், தயாரிப்பாளருமான வரலட்சுமி, சமீபத்தில் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான ‘எஸ்.சரஸ்வதி’ என்ற படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் திரைக்கு வந்துள்ளது. இப்படத்துக்கு கதை எழுதியிருந்த சாய் மாதவ் புர்ரா, திரைக்கு வந்துள்ள ‘எஸ்.சரஸ்வதி’ படத்தை பார்த்துவிட்டு, ‘எனது கதையை பலாத்காரம் செய்துவிட்டார்கள். நான் எழுதியது, பழிவாங்கும் கதை அல்ல. அதன் ஆன்மாவே வேறு. இப்போது படத்தில் இடம்பெற்றிருப்பது வேறு’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தெலுங்கு படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த கதாசிரியருக்கு பதிலடி கொடுத்துள்ள வரலட்சுமி, ‘ஒரு சீனியர் என்ற முறையில் கதாசிரியரை நான் பெரிதும் மதிக்கிறேன். கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அவரை கதை விவாதத்துக்கு அழைத்தோம். ஆனால், அவர் வேறு சில பெரிய படங்களில் பணியாற்றி பிசியாக இருந்ததால், எங்கள் படத்துக்கு ஒதுக்குவதற்கு அவரிடம் நேரம் இல்லை. அதற்காக, இப்படி பலாத்காரம் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது தவறு. அப்படிப்பட்டவரிடம் இருந்து இந்த வார்த்தையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்ன வார்த்தை பேசுகிறோம் என்பதில் அவர் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Varalakshmi ,Hyderabad ,Andhra Pradesh ,Telangana ,Sai Madhav Purra ,
× RELATED தக்காளி சீனிவாசன் காலமானார்