தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது மனைவி சுரேகா குறித்து வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்பதிவில் அவர், ‘எனது தொடர்ச்சியான வெற்றிக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், எனது கடின உழைப்போ, திறமையோ காரணம் இல்லை என்றும்; அதற்கு நீ மட்டுமே முழு காரணம் என்றும் நான் சொல்வேன். நமக்கு திருமணம் நடந்த 1980 பிப்ரவரி 20ம் தேதியில் இருந்து நீதான் எனக்கு மிகப்பெரிய பலம். இந்த நேரத்தில் என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. குடும்பத்தின் மையமான நீ, அனைவர் மீதும் கண்மூடித்தனமான அன்பு செலுத்துகிறாய்.
எனது குடும்ப உறுப்பினர்களை உனது குடும்பத்தை போல் ஏற்றுக்கொண்டாய். ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்காக நின்றாய். எனது பெற்றோருக்கு உன்மீது செலுத்தும் அன்புக்கு இணையாக, அவர்களின் மகளாகவே நீயும் மாறிவிட்டாய். என்னுடைய எல்லா பொறுப்புகளையும் நீதான் ஏற்றுக்கொண்டாய். அதனால்தான் எனது தொழிலில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. ஒவ்வொரு பிரச்னையிலும், சந்தோஷத்திலும் நீ எங்களின் கரம் பிடித்தாய். நீ வெறும் மனைவி மட்டுமல்ல, என்னுடைய முழு பலம்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
