×

‘லவ் ஜிகாத்’ எனக்கூறி விமர்சனம்: காதலுக்கு மதச்சாயம் பூசுவது முட்டாள்தனம்; லேகா வாஷிங்டன் ஆவேசம்

மும்பை: தனது காதல் உறவை கொச்சையாக விமர்சிப்பவர்களுக்கு நடிகை லேகா வாஷிங்டன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். பிரபல இந்தி நடிகர் இம்ரான் கானும் நடிகை லேகா வாஷிங்டனும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்த இம்ரான் கான், தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அப்போது அவர் ‘நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இவர்களது மாறுபட்ட மதப் பின்னணியை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் சிலர் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வந்ததோடு, இவர்களது உறவை ‘லவ் ஜிகாத்’ என்று விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மவுனம் கலைத்த லேகா வாஷிங்டன், ‘எனது குடும்பம் பர்மா, இத்தாலி, பஞ்சாப், யூத மற்றும் தென்னிந்திய கலாசாரங்கள் கலந்த பன்முகத்தன்மை கொண்டது. எங்களது குடும்பத்தினர் அனைவரையும் மதிக்கக் கூடியவர்கள். எங்களது காதலை கொச்சைப்படுத்துபவர்கள் முட்டாள்கள்.

பல ஆண்டுகளாக ஒரு கலைஞராகவும், நடிகையாகவும் சுயமாக உழைத்து வரும் என்னை, ஒரு பிரபலமான ஆணுடனான உறவை வைத்து மட்டுமே அடையாளம் காண்பது வருத்தம் அளிக்கிறது’ என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டில் இவர்களது திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லேகாவின் இந்த துணிச்சலான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டன் நடித்திருக்கிறார்.

Tags : Lekha Washington ,Mumbai ,Imran Khan ,
× RELATED கணவரின் கதையில் நடிக்கும் சமந்தா