தென்னிந்திய படவுலகில் கடந்த சில ஆண்டுகளாக ‘மீடூ’ என்ற இயக்கம் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியுள்ளது. நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் குறித்து, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டு வருகின்றனர். அதில் பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி முக்கியமானவர். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘திரையுலகில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாலியல் தொல்லைக்கு பெண்கள் இடமளிக்க கூடாது’ என்று கருத்து தெரிவித்தார்.
இது, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தவறு சொல்வது போல் இருப்பதாக பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து சின்மயி வெளியிட்ட பதிவில், ‘நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது, நான் அதற்கு தகுதியானவள் என்றோ அல்லது அதை நான் விரும்பி செய்தேன் என்றோ யாரும் சொல்ல முடியாது. அதை நான் விரும்பியோ அல்லது கேட்டோ பெறவில்லை. திரைத்துறையில் இருக்கும் சில பெரிய மனிதர்கள் இதுபோன்ற கருத்துகளை சொல்லும்போது, அது பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் காயப்படுத்துகிறது.
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு, ஆண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்’ என்று கோபமாக தெரிவித்துள்ளார்.
