நான் எலெக்ட்ரானிக் இசைக்கு எதிரானவனா? பத்மபாணி விருது பெற்ற இளையராஜா பேச்சு

சென்னை: அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விருது விழா, மும்பை சத்ரபதியிலுள்ள எம்ஜிஎம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட இசை அமைப்பாளர் இளையராஜா, சாதனையாளருக்கான பத்மபாணி விருது பெற்ற பிறகு பேசியதாவது: எனது 1,541வது படத்தின் பின்னணி இசை வேலைகளை முடித்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். சிலர் என்னிடம், ‘நீங்கள் எப்படி இதுபோன்ற இசையை உருவாக்குகிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். எனக்கு இசையை பற்றி எதுவும் தெரியாது. அதனால்தான் இன்றுவரை அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இசையை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தால், அதில் நான் தேர்ந்துவிட்டேன் என்று நினைத்து வீட்டிலேயே இருந்திருப்பேன்.

அந்தக்காலத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இப்போது ஒரு பாடலை உருவாக்குவது என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1968களில் இசை வேறுமாதிரி இருந்தது. இசைக்கருவிகளை வைத்து இசை அமைத்தோம். ஆனால், இன்று மின்னணு கருவிகளின் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் இசை அமைத்து வருகின்றனர். இன்றுவரை நான் இசைக்குழுவை வைத்துதான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனியாக நோட்ஸ் எழுதுவேன். நான் எலெக்ட்ரானிக் இசைக்கு எதிரானவன் இல்லை. ஆனால், இசைக்கருவிகளில் இருந்து உருவாக்கப்படும் இசைக்கு உணர்ச்சிகள் இருக்கிறது. இவ்வாறு இளையராஜா பேசினார்.

Related Stories: