கதையின் நாயகனாக எம்.எஸ்.பாஸ்கர்

குணச்சித்திரம், காமெடி, வில்லன் என்று பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட கேரக்டர்களில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், தற்போது முதல்முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘அக்கரன்’. அவரது மகள்களாக ‘பள்ளிப் பருவத்திலே’ வெண்பா, பிரியதர்ஷினி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் கபாலி விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடிக்கின்றனர்.

 குன்றம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரிக்கிறார். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஆர்.ஹரி இசை அமைக்கிறார். அருண் கே.பிரசாத் இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிரியதர்ஷினியை, அரசியல் செல்வாக்கு மிகுந்த நமோ நாராயணனின் ஆட்கள் கடத்திச் சென்று கொன்றுவிடுகின்றனர். அவர்களை எம்.எஸ்.பாஸ்கர் எப்படி தந்திரமாகப் பழிவாங்கி, இறுதியில் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது கதை.

 முழு படத்தையும் பார்த்த எம்.எஸ்.பாஸ்கர், திரையில் தன்னைக் கதையின் நாயகனாகப் பார்த்து கண்கலங்கினார். ‘நடிக்க வந்து பல வருடங்களாகி விட்டது. இப்போதுதான் என்னை முழுமையான நடிகன் என்று உணர்ந்து திருப்தி அடைகிறேன்’ என்று சொன்னார். மதுரை பின்னணியில் கதை நடக்கிறது. வரும் மார்ச் மாதம் ஓடிடியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அக்கரன் என்றால், யாராலும் அழிக்க முடியாதவன் என்று அர்த்தம்’ என்றார்.

Related Stories: