பிகினிங்

சிங்கிள் ஷாட் மூவி, குறைவான நேரத்தில் உருவாக்கப்பட்ட படம் என்று, திரையுலகில் அவ்வப்போது சில புதுமை படைப்புகள் வழங்குவார்கள். அந்த வரிசையில் உருவாகியுள்ள ‘பிகினிங்’ படம், ஒரே திரையில் 2 காட்சிகளாக ஓடும் (ஸ்பிளிட் ஸ்கிரீன்) படமாக வெளியாகியுள்ளது. ஹீரோயின் கவுரி கிஷன், திடீரென்று சில மர்மநபர்களால் கடத்தப்பட்டு, ஒரு வீட்டிலுள்ள சின்ன அறையில் அடைத்து வைக்கப்படுகிறார். பிறகு மயக்கத்தில் இருந்து தெளியும் அவர், அங்கு ஒரு பழைய செல்போனைக் கண்டெடுக்கிறார். அதிலிருந்து பேசும்போது, மறுமுனையில் மாற்றுத்திறனாளி வினோத் கிஷன் பேசுகிறார். அவருக்கு கவுரி கிஷன் எந்த மாதிரி ஆபத்தில் சிக்கியிருக்கிறார் என்று புரியவில்லை. இறுதியில் கவுரி கிஷன் காப்பாற்றப்பட்டாரா? கடத்தியவர்கள் யார் என்று சொல்லியிருக்கிறது படம்.

முகநூல் நட்பால் ஏற்படும் பிரச்னைகள், மனவளர்ச்சி குன்றிய இளைஞனின் வாழ்க்கை, அவரது தாய் சந்திக்கும் அவஸ்தைகள் போன்ற அழுத்தமான விஷயங்களைப் பற்றி படம் பேசியிருக்கிறது. புதிய பாணியில் பழைய கதையைச் சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஜெகன் விஜயா. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையும், வீரகுமாரின் ஒளிப்பதிவும் அதற்கு பேருதவி செய்துள்ளன. மாற்றுத்திறனாளியாக வினோத் கிஷன் சிறப்பாக நடித்துள்ளார். அவரது உடல்மொழியும், பேச்சும் கேரக்டருக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. கவுரி கிஷன் தனது பரிதவிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரைக் கடத்தும் பேஸ்புக் கும்பலின் செயல்பாடுகளில் சீரியஸ் இல்லை, லாஜிக் இல்லை. பாலியல் பலாத்காரத்தை எளிதாக கடந்து செல்கிறது படம். அழுத்தமாக அமைந்திருக்க வேண்டிய கிளைமாக்ஸ், பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

Related Stories: