சினிமாவை தெரிஞ்சிட்டு விமர்சனம் பண்ணுங்க: இயக்குனர் அஞ்சலி மேனன் கோபம்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பெங்களூர் டேஸ் படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். பெண் இயக்குனர்களில் முன்னணி இடத்தில் இவர் இருக்கிறார். இவர் இயக்கியுள்ள வொண்டர் உமன் மலையாள படத்தில் பார்வதி, நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 18ம் தேதி ஓடிடியில் வெளியானது. இது தொடர்பாக பேட்டியளித்த அஞ்சலி மேனன், ‘எனது சில படங்களை விமர்சனம் என்ற பெயரில் சிலர் கொச்சைப் படுத்தியுள்ளனர். எனக்கு மட்டும் அல்ல, பல நல்ல படங்களுக்கும் இந்த கதி ஏற்பட்டுள்ளது. அப்படி விமர்சிப்பவர்களை நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சினிமாவை புரிந்து, தெரிந்துகொண்டு வர வேண்டும்.

அதைவிட்டு விட்டு முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிடுகிறார்கள்’ என்றார்.அஞ்சலி மேனனின் இந்த கருத்தால் நெட்டிசன்கள் கொதித்துப்போயுள்ளனர். பலரும் அவரை வசைபாடி வருகிறார்கள். ஓட்டலுக்கு சென்று தோசை சாப்பிட்டுவிட்டு, நல்லா இல்லையென்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்ல முடியும். அதற்காக அந்த ஓட்டல் மேனேஜர் தோசையை பற்றி அறிந்துகொள்ளுங்கள் என பாடம் நடத்தினால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் அஞ்சலி மேனன் சொல்வதும் இருக்கிறது என ஒரு நெட்டிசன் கூறியிருக்கிறார். இதுபோல் பலரும் அஞ்சலி மேனனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories: