நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ‘ஹேக்’ ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்தி, இந்த ஆண்டு ‘விருமன், ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25வது படமான ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தூத்துக்குடியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கார்த்தி அவரது டிவிட்டர் பக்கத்தில், தனது பேஸ்புக் ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை சரிசெய்ய பேஸ்புக் டீமுடன் முயற்சி செய்து வருவதாகவும் நேற்று காலை தெரிவித்துள்ளார். கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் பட பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் முன்னதாக அமிதாப் பச்சன், பிரபாஸ், தனுஷ், ஸ்ருதி ஹாசன், பார்வதி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பலரின் சமூக வலைத்தள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. கடும் முயற்சிகளுக்கு பிறகு அவர்களது பக்கங்கள் மீட்கப்பட்டது. அந்த வரிசையில் கார்த்தியின் பேஸ்புக் பக்கமும் ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: