×

மதுரைக்கு திடீர் விசிட் அடித்த கேத்ரினா கைஃப்

மும்பை: மதுரையை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூரில் அமைந்துள்ளது `மவுண்ட் வியூ’ பள்ளி. அந்தப் பள்ளியின் தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காகத்தான் கேத்ரினா கைஃப் அங்கு வந்திருந்தார். தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காக அந்தப் பள்ளியின் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் ஆடிய நடனம்தான் தற்போது டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் பள்ளிக்கும் கேத்ரினாவின் குடும்பத்துக்கும் நீண்ட நாள் தொடர்பு உள்ளது. கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தன்னார்வல அமைப்புதான் ரிலீப் புராஜெக்ட் இந்தியா. 2009ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்புதான், 2015ல் மதுரைக்கு அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூரில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக மவுண்ட் வியூ பள்ளியினை தோற்றுவித்தது.

கேத்ரினா கைஃபின் அம்மா மேரி சுசானா டர்கோட்டி இந்த ரிலீப் புராஜெக்ட் இந்தியா அமைப்பின் குழு உறுப்பினராகவும், மேலும் மவுண்ட் வியூ பள்ளியின் கல்வி ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். மேரி சுசானா லண்டனில் பிறந்தவர். கேத்ரினாவின் தந்தை காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சுசானா பல தன்னார்வ நிறுவனங்களில் செயல்பட்டு வருபவர். அப்படியாகத்தான் இந்தப் பள்ளியைத் தொடங்கியதிலும் அவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே `மவுண்ட் வியூ’ பள்ளியின் தொடக்க விழாவில் கேத்ரினா கைஃப், தனது அம்மா மேரி சுசானா டர்கோட்டியுடன் கலந்துகொண்டார். அவர் விழாவில் கலந்துக்கொண்டு அரபிக்குத்து பாட்டிற்கு நடனமாடியதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட அது தற்போது வைரலாகியிருக்கிறது. இந்த ரிலீப் புராஜெக்ட் இந்தியா அமைப்பிற்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு 2020ல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்நிகழ்ச்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், ‘மவுண்ட் வியூ பள்ளியின் தொடக்க நாள் விழா நிகழ்ச்சியை அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நிதி அளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அவர்களால்தான் இன்று மூன்று வகுப்பறைகளை திறக்க முடிந்தது. இந்தப் பள்ளியை நிர்வகித்து வரும் என்னுடைய அம்மாவையும், தம்பியையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் பள்ளி மிகவும் அழகாக உள்ளது’என்று தெரிவித்திருந்ததார். இதற்கு பாலிவுட் நடிகர்களான ஹிரித்திக் ரோஷன், ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Tags : Katrina Kaif ,Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...