2வது திருமணம் பற்றிய கேள்விக்கு நழுவல்.! நான் என்னை மட்டுமே காதலிக்கிறேன்: அமலா பால்

சென்னை: அமலா பால் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமலா பால் தயாரித்து, தடயவியல் நிபுணர் கேரக்டரில் நடித்துள்ள படம், ‘கடாவர்’. வரும் 12ம் தேதி ஓடிடியில் வெளியாகும் இப்படத்தை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார். ஹரீஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா, ரித்விகா நடித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அரவிந்த் சிங் ஒளிப் பதிவு செய்ய, ரஞ்ஜின் ராஜ் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அமலா பால் பேசியதாவது: அபிலாஷ் பிள்ளை, அனூப் எஸ்.பணிக்கர் இருவரும் ‘கடாவர்’ கதையை விவரித்தபோது, என் கேரக்டர் புதுமையாகவும், வலிமையாகவும், நடிப்புக்கு சவால் விடுவதாகவும் இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.

பிறகு அவர்கள் தயாரிப்பாளர் கிடைக்காமல் சிரமப்படும் நிலையைப் பார்த்து நானே தயாரிப்பாளரானேன். இப்படத்தை தயாரித்து முடிப்பதற்குள் எனக்கு உயிர் போய் உயிர் வந்தது. இது எனக்கு மறு பிறவி. நான்கு வருடங்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய இப்படத்தை வெளியிட திட்டமிட்டபோது, பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டது. எனது படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுக சதி செய்தனர். ஆனால், கடவுள் ஆசி மற்றும் சமீபத்தில் மறைந்த என் தந்தையின் ஆசியால், நாளை மறுதினம் ஓடிடியில் இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை.

அப்படி நடித்தால், அந்த கேரக்டருக்கு மதிப்பு இருக்காது. ‘ராட்சசன்’ படத்துக்குப் பிறகு எனக்கு வருகின்ற கதைகள் எல்லாம் கிரைம் திரில்லராகவே இருக்கிறது. மீண்டும் காதல் கதையில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். தற்போது எனது சொந்த வாழ்க்கையைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள். நான் என்னை மட்டுமே காதலிக்கிறேன். தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன். மீண்டும் தயாரிப்பில் ஈடுபட மாட்டேன். ‘கடாவர்’ படத்தின் தயாரிப்பு பணியில் சந்தித்த கசப்பான அனுபவங்களை ஒரு பாடமாக நினைத்து, அவற்றை எல்லாம் மறந்துவிட நினைக்கிறேன்.

Related Stories: