இளைஞர்களுக்கு சிறந்த பிளாட்பார்ம் ஓடிடி: தயாரிப்பாளர் தனஞ்செயன்

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ்.சி.பி தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பதிவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது இதில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:

இது ஒடிடி-க்களின் காலம். ஒடிடிகளில் படம் பார்ப்பது அதிகரித்துள்ளது. அதனால் தான் புது புது ஒடிடி நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வரும் ஒடிடி நிறுவனங்கள் ‘கிரிமினல்’ போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களை தான் அதிகம் விரும்புகிறார்கள். காரணம், மக்களும் இதுபோன்ற படங்களை விரும்பி பார்ப்பதுதான். பொதுவாக ஒடிடி நிறுவனங்கள் பெரிய படங்களை தான் வாங்குகிறார்கள், சிறிய படங்களை வாங்குவதில்லை, என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

உண்மையில் ஒடிடி நிறுவனங்கள் அதிகம் வாங்குவது சிறிய படங்களைத்தான். நல்ல கதையாக இருந்தால், நடிகர்கள் யார்? என்பதை ஒடிடி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. ரசிகர்களுக்கு ஏற்ற படமா? என்பதை மட்டும் தான் பார்க்கிறார்கள். அதனால், இளைஞர்கள் நிறைய பேர் சினிமாத்துறைக்கு வர வேண்டும், படங்கள் நிறைய தயாரிக்க வேண்டும். நல்ல படமாக இருந்தால் அதை வாங்க ஒடிடி நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. என்றார்.

Related Stories: