×

மாநாடு - திரை விமர்சனம்

எஸ். எஸ் .ஐ புரோடக்சன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், 'வாகை' சந்திரசேகர்,  பிரேம்ஜி, கருணாகரன், டேனி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாநாடு'
வழக்கமாக நாம் பார்த்துப் பழகிய ஹாலிவுட் மெத்தட் டைம் லுப் கதைதான். ஆனால் அதில் வெங்கட்பிரபுவின் மேஜிக் என்ன என்பதே 'மாநாடு'.

துபாயிலிருந்து நண்பனின் திருமணத்திற்கு வருகிறார் அப்துல் காலிக் (சிலம்பரசன்). ஆனால் வந்ததோ திருமணத்தை நிறுத்தி கல்யாண பெண்ணை கடத்தி நண்பன் ஈஸ்வரனுக்கு(பிரேம்ஜி) திருமணம் செய்து வைப்பதுதான் உண்மையான திட்டம் . ஆனால் எதிர்பாராவிதமாக ரஃபீக்(டேனி) அப்துல் காலிக் ஓட்டிவந்த காரில் மோத அவரும்,  அவரது நண்பர்களும் போலீஸ் பின்னிய சதிவலையில் சிக்கிக் கொள்கிறார்கள். மேலும் அத்தனையும் ஒரு மாபெரும் சமூக பிரச்சனைக்கான சதி என்பது தெரியவர அதை அப்துல் காலிக் ஆன சிம்பு முறியடித்தாரா இல்லையா என்பது பர பர டைம் லூப் ஆக்சன் க்ளைமாக்ஸ்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உடல் எடையை குறைத்து நிறையவே மாற்றங்கள் பெற்று கம் பேக் கொடுத்திருக்கிறார் சிலம்பரசன். சேசிங் ,ஆக்சன், குறும்புத்தனமான வசனங்கள் சுற்றி என்ன நடக்கிறது என்ன தெரியாமல் தவிப்பது என சிம்பு மீண்டும் தனது ரசிகர்களுக்கு மாஸ் விருந்து வைத்திருக்கிறார். 'ஒரு சமூகத்தினர் மேல தேவையில்லாமல் பழி சுமத்தினா, அதை அழிக்க மீண்டும் நூறு வருடங்கள் ஆகும்'. 'எத்தனை நாளைக்குதான் சாதி மதத்தை வெச்சு அரசியல் செய்வீங்க' போன்ற சிம்புவின் வசனங்கள் நடப்பு பிரச்சனைகளுக்கு ஏற்ப பளிச்சென மின்னுகிறது.

'நான் ஏன்டா திரும்பத் திரும்ப எந்திருக்கிறேன்' ... இப்படி கேட்கும் இடத்தில் இருந்து படம் மொத்தமாக எஸ்.ஜே. சூர்யாவின் கைக்கு இடம் மாறுகிறது. படத்தின் ஹீரோ சிம்புவா?இல்லை எஸ்.ஜே.சூர்யாவா? என்னும் அளவிற்கு அவரின் நடிப்பில் அவ்வளவு நேர்த்தி பக்குவம். திரையிலும் என்ட்ரி துவங்கி எண்டு கார்டு போடும் வரை எஸ்.ஜே.சூர்யா மாபெரும் மாஸ் காட்டுகிறார் மனிதர். நடிப்பு ராட்சஸன் என்றே சொல்லலாம். அதிலும் சுமாராக ஆறு நிமிடங்கள் வரையில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட மூவரும் வசனங்களிலேயே விளையாடும் இடத்தில் அரங்கம் அதிர்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி ,கருணாகரன் வாகை சந்திரசேகர்,ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனை பேரும் தனக்கான கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கின்றனர். ரமேஷ் அரவிந்த், டேனி, ஸ்டண்ட் சில்வா என எந்த கேரக்டரும் ஒதுக்கி வைக்க முடியாத அளவிற்கு கேரக்டரை டிசைன் செய்து இருக்கிறார் வெங்கட்பிரபு. ஏற்கனவே வெளியான டைம் லூப் திரைப்படங்கள் சிலவற்றின் பெயர்களை கூறி :அதே மாதிரிதான் இதுவும்' என சிம்பு சொல்லும் இடங்களில் வெங்கட்பிரபுவின் சினிமா மேக்கிங் நேர்மை தெரிகிறது. அதையும் மீறி சாதாரணமாக ஒரே காட்சியை திரும்பத் திரும்ப கொடுத்து சலிப்பை ஏற்படுத்தாமல் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திரைக்கதையில் வேகமும் விறுவிறுப்பும் சேர்த்திருக்கிறார் வெங்கட்பிரபு.

குறிப்பாக இடைவேளைக்கு பிறகு திரைக்கதை சற்றும் நம்மை கண்ணெடுக்காமல் பார்க்க வைத்ததற்கு சபாஷ்.  டைம் லூப் படங்கள் என்றாலே அதில் லாஜிக் பார்க்கவே கூடாது. என்கையில் இந்தப்படத்திலும் ஒரு சில லாஜிக் பிரச்சனைகள் இருப்பினும் டைம் லூப் கிராஃபுக்குள் அந்த லாஜிக்குகள் காணாமல் போகின்றன. படத்தின் இன்னொரு ஹீரோவாக செயல்பட்டிருப்பது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை.

'மெஹருசைலா' பாடல் ஏற்கனவே ஹிட் ஆன போதும் படத்தின் காட்சிகளுக்கிடையே வைத்து கடந்து போக முடியாதபடி அமைத்தது வெங்கட் பிரபுவின் மாஸ்டர் மைண்ட் . ஆக்‌ஷன் மாஸ் கட்சிகளுக்கு யுவன் இசை ஹீரோ எனில் ஹீரோயினாக செயல்பட்டிருக்கிறது ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு. எங்கும் தொங்காமல் படம் ஜெட் வேகத்தில் பயணிக்க இன்னொரு பலம் எடிட்டர் பிரவீன் எல்.கே. சீட்டு நுனியில் அமர வைத்ததில் மாபெரும் பங்கு எடிட்டருக்கே.

'இதுதான் அரசியலா சார்?! நல்லா இருக்கு சார்' என்னும் வசனங்கள் மறைமுக சட்டையர் . மொத்தத்தில் டைம் லூப் படங்கள் எத்தனையோ வந்திருப்பினும் அரசியல், ஆக்‌ஷன், விறுவிறுப்பு அதற்குள் பின்னப்பட்ட டைம் லூப் என 'மாநாடு' கமர்சியலாகவும் மனதில் நிற்கிறது.

Tags :
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்