இரண்டு மணி நேரப் படத்தில் எப்போதோ ஒரு முறைதான் நகைச்சுவை; சென்டிமென்ட் படமாகத்தான் உள்ளது: சபாபதி பட விமர்சனம்

ஆர்கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சீனிவாச ராவ் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் சந்தானம், ப்ரீத்தி வர்மா நடிப்பில் கடந்த நவ.19-ம் தேதி வெளிவந்த  திரைப்படம் சபாபதி. இயக்குனர் சீனிவாச ராவ் சந்தானத்தை வைத்து நகைச்சுவைப் படம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் ஒரு சீரியசான படத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தில் எப்போதோ ஒரு முறைதான் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது. மற்றபடி அப்பாவுக்கும் மகனுக்குமான ஒரு சென்டிமென்ட் படமாகத்தான் இப்படம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் எம்எஸ் பாஸ்கரின் மகன் சந்தானம். அரியர்ஸ் வைத்து படித்து முடித்தவர். தன் மகன் சந்தானம் நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அப்பா பாஸ்கர். சிறு வயதிலிருந்தே திக்கித் திக்கிப் பேசுபவர் சந்தானம்.

அவருக்கு எதிர்வீட்டு ப்ரீத்தி மீது காதல் வேறு. வேலைக்குச் சென்றால் காதலி கிடைப்பார் என்கிறார் தங்கை. அதனால் இன்டர்வியூவிற்குச் செல்ல ஆரம்பிக்கிறார் சந்தானம். இன்டர்வியூ செல்லும் போதெல்லாம் அதுவே அவருக்குப் பிரச்சினையாக இருக்கிறது. அப்படிப்பட்டவருக்கு திடீரென 20 கோடி நிறைந்த ஒரு சூட்கேஸ் கிடைக்கிறது. அதை வைத்து அவர் என்ன செய்தார், வேலைக்குப் போனாரா, காதலி கிடைத்தாரா என்பதுதான் மீதிக் கதை. குக் வித் கோமாளி புகழ் அறிமுகமாகும் படம் என எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சந்தானம் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. இரண்டே காட்சிகளில் மட்டும் வந்துவிட்டு சிரிக்கவும் வைக்க முடியாமல், காணாமல் போகிறார் புகழ்.

Related Stories: