நான் லக்னோ வரவில்லை போலி விளம்பரத்தை நம்பாதீங்க!: நடிகர் கோவிந்தா அலறல்

மும்பை: உத்தரபிரதேசத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக வெளியான போலி விளம்பரத்தை நம்ப வேண்டாம் என்று நடிகர் கோவிந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என்னுடைய பெயரில் போலி விளம்பரம் வைரலாகி வருகிறது. இதுபோன்ற விளம்பரங்களை பொதுமக்களோ, ரசிகர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார், மேலும் அந்த பதிவில் தன்னைப் பற்றிய விளம்பர நோட்டீசை பகிர்ந்துள்ளார்.

அந்த நோட்டீசில், ‘வரும் டிசம்பர் 20ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் கோவிந்தா பங்கேற்க உள்ளார். அப்போது அவரை ரசிகர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடலாம். இதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்’ எனக்கூறி இரண்டு செல்போன் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More